திருவண்ணாமலை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது மணிமங்கலம் கிராமம். இந்த ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சரிவர படிக்கவில்லை என்று கூறி தலைமை ஆசிரியர் உஷா ராணி தீக்குச்சியைப் பற்றவைத்து அந்த மாணவியின் முகத்தில் சூடு வைத்துள்ளார். இதனால் மாலை பள்ளியில் இருந்து அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்ற அந்த மாணவி தனது பெற்றோரிடம் தலைமையாசிரியை முகத்தில் தீக்குச்சி மூலம் சூடு வைத்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து மாணவியின் தாயார் பள்ளி தலைமையாசிரியரிடம் இது குறித்து கேட்டபோது முறையான பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. குழந்தையின் கன்னத்தில் சூடு வைத்ததால் தோல் தீயால் கருகி வெள்ளையாகி இருந்தது. இதற்காக அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அக்கிராமப் பொதுமக்களுடன் சென்று மாணவியின் தாயார் மங்கலம் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார். இது தொடர்பாக மங்கலம் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர். மாவட்ட கல்வித்துறை சார்பிலும் துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளது. நான்காம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியையே, அதுவும் தீக்குச்சியால் சூடு வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.