கடலம்மா என்னை மிரட்டினாள்!
ஆசியாவின் முதல் பார்வைச்சவால் உள்ள ஸ்கூபா டைவர்
"வெளியே குளிர்வது போல் இருக்கும் இந்த டிசம்பரில், உள்ளே வெதுவெதுப்பாக இருந்தது. ஒரு பக்கம் என் மூச்சு சத்தம், இன்னொரு பக்கம் ஆழ்கடலின் நிசப்தம். அழுத்தம் என் காதுகளை அடைத்தது. நான் செய்தது இயற்கைக்கு மாறான ஒன்று தான். தரை மேல் வாழ்வது தான் இயற்கை. உள்ளே போகப் போக இயற்கை என்னை மிரட்டுவது போல உணர்ந்தேன். 'என்னடா, தைரியமா இங்க வந்துட்டியா?' என்று கடலம்மா என்னைக் கேட்பது போல இருந்தது. 'சவால் விட்டுலாம் நான் வரவில்லை அம்மா... ஒரு அனுபவத்துக்காகத் தான் வந்தேன். எனக்கு இருக்கும் பார்வைச் சவாலால் எதையெல்லாம் செய்ய முடியாது என்று பொதுவாகச் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்து பார்க்கவேண்டும் என்பது எனக்கு விருப்பம். அதனால் தான் வந்தேன் அம்மா'னு சொன்னேன்", ஆழ்கடலின் அமைதியும் வெப்பமும் நீங்காமல் பேசுகிறார் இன்ஸ்பையரிங் இளங்கோ.
வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும் வாழ்வியல் பேச்சாளாராகவும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தன் நினைவிலிருந்தே பாடக்கூடிய பாடகராகவும் பல புகழ்பெற்ற விளம்பரப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவராகவும் பல பரிமாணங்களில் நம்மை இன்ஸ்பையர் செய்து கொண்டிருக்கும் 'இன்ஸ்பையரிங்' இளங்கோ, தன் அடுத்த சாதனையாக ஆசியாவிலேயே முதல் முறையாக 'ஸ்கூபா டைவிங்' பயிற்சி சான்றிதழ் பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகி இருக்கிறார். கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் 'டெம்பிள் அட்வென்ச்சர்ஸ் ஸ்கூபா டைவிங் பயிற்சி மையம்' மூலம் பயிற்சியாளர் அரவிந்த் தருன்ஸ்ரீயின் பயிற்சியில் இந்த சாதனையை செய்திருக்கிறார் இளங்கோ.
அரவிந்த் - இன்ஸ்பையரிங் இளங்கோ
'ஸ்கூபா டைவிங் என்றால் என்ன, அதன் விவரங்கள் என்ன'வென்று அரவிந்திடம் கேட்டோம். "ஸ்கூபா டைவிங் என்பது நடுக்கடலுக்குச் சென்று ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆழ்கடலில் பனிரெண்டு மீட்டர் ஆழம்வரை சென்று நீந்துவதாகும். அந்த ஆழத்தில் சிலிண்டரைப் பயன்படுத்தி சுவாசிக்கவும், அழுத்தத்தை சமாளிக்கவும் பயிற்சி தேவை. இந்தியாவில், முதல் ஸ்கூபா டைவிங் பயிற்சி மையம் எங்களுடையது தான். சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் பயிற்சியளிக்கிறோம். ஆழ்கடலின் ஒலிகள், குளிர்தன்மை, கடந்து செல்லும் குட்டிக்குட்டி ஜெல்லி மீன்களின் ஸ்பரிசம் என அந்த அனுபவம் வேற லெவலில் இருக்கும். நான் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சியளிக்கும் உரிமமும் பெற்றிருக்கிறேன். கழுத்துக்கு கீழே செயல்பட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும் பயிற்சியளித்திருக்கிறோம். ஜஸ்டின் ஜேசுதாஸ் என்பவர் தான் என்னிடம் பயிற்சி பெற்ற முதல் மாற்றுத்திறனாளி. பார்வைச் சவால் உள்ளவர்களை இதற்கு பயிற்றுவிக்க வேண்டுமென்று ஆர்வத்துடன் இருந்த என்னிடம் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு இன்ஸ்பையரிங் இளங்கோவின் விருப்பத்தைச் சொல்லி அறிமுகப்படுத்தினார். எந்தத் தடையும் தயக்கமும் இல்லாமல், மிகச் சிறப்பாக சொல்வதைப் புரிந்துகொண்டு, வெற்றிகரமாக பயிற்சி பெற்று சாதனை செய்திருக்கிறார் இளங்கோ. இவரைப் பார்த்து சண்டிகர், வேலூர் முதலிய ஊர்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்களில் இருந்து விரைவில் பயிற்சிக்காக வர இருக்கிறார்கள். மகிழ்ச்சி" என்றார் அரவிந்த்.
"கடைசி வரை விட்டுவிடலாம், வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் அரவிந்த் கொடுத்த நம்பிக்கையும், தைரியமும் தான் பண்ண வச்சுச்சு. ஸ்கூபா டைவிங்கில், தண்ணீருக்கடியில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள சமிக்சைகளை பயன்படுத்துவார்கள். என்னால் பார்க்க முடியாது என்பதால், எனக்காக தொடுதலை பயன்படுத்தி ஒரு பயிற்சி முறையை உருவாக்கினார். இதை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக மத்திய அரசின் அதிகாரிகளிடம் பேசிய போது, ஆசியாவில் இதுவரை பார்வை சவால் கொண்ட யாரும் இதைச் செய்ததில்லை, உலக அளவில் யாரும் செய்திருக்கிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று கூறினார்கள். ரெண்டு முறை டைவ் செய்தேன், ஒரு முறை 37 நிமிடமும் இன்னொரு முறை 42 நிமிடம். 12 மீட்டர் ஆழம் தான் போக வேண்டும், ஆனால் நான் என் சொந்த விருப்பத்தில் 18 மீட்டர் ஆழம் வரை சென்றேன். ஆக்சிஜன் சிலிண்டரின் மீட்டர் குறைந்தபட்ச பாதுகாப்பு அளவுக்கு வந்தவுடன் என்னை வற்புறுத்தி மேலே அழைத்து வந்த அரவிந்த், விட்டா நீங்க இங்கயே தங்கிடுவீங்கன்னு கிண்டல் செய்தார் " என்று உற்சாகத்துடன் பேசிய 'இன்ஸ்பையரிங்' இளங்கோ தன் நம்பிக்கையுடன் சென்றது ஆழத்துக்கல்ல, உயரத்துக்கென்றே தோன்றுகிறது.
வசந்த் பாலகிருஷ்ணன்