Skip to main content

மனிதன் மிருகமாகிறானா ?

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

சிவப்பு நிற டாட்டா இண்டிகா கார் கரப்பான் பூச்சியை கவிழ்த்து போட்டது போல் கவிழ்ந்து கிடக்கிறது. கவிழ்ப்பதற்கு முன்னர், ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது. அதன்பின்தான் காரை கவிழ்த்திருக்க வேண்டும். காருக்கு அருகிலேயே ஐந்து பேரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, உதிரம் வலிய அமர்ந்திருக்க அவர்களை மனிதர்கள் கூட்டமாக காலால், கையால் புரட்டி அடித்தனர். அவர்களோ வலியில் துடிதுடித்தனர். கும்பலாக ஒரு சிலர் காரில் வந்தவர்களை  அடித்துக்கொண்டிருக்க, அதை ஊர் திருவிழா போன்று வீட்டு சுவற்றிலும், வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்து வந்தனர். பின்னர், போலீஸ் வந்து, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்றவுடன் தாக்கப்பட்டதில் ஒருவரான  65 வயது மூதாட்டி இறந்துவிட்டார். மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் இரண்டு பேருக்கு முதல் உதவி செய்திருக்கின்றனர். 
 

thiruvannamalai

 

 


பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், மலேசியாவைச் சேர்ந்த சந்திரசேகரன், மலேசியாவைச் சேர்ந்த மோகன்குமார் (இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்), மயிலாப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகியோர்தான் காருக்குள் இருந்தவர்கள். அந்த ஊர் மக்களால் தாக்கப்பட்டவர்கள். அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள் என்று இப்படி மிருகத்தை போன்று மாறி காரில் வந்தவர்களை தாக்கியிருக்கிறார்கள், தெரியுமா? காரில் வந்தவர்கள் அந்த ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்ல சென்னையில் இருந்து வந்துள்ளனர். வழி மாறிச் சென்றதால், கோவிலுக்கு வழியை விசாரித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். அப்போது அங்கே இருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார் அந்த மூதாட்டி. இதனைத்தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து நீங்கள் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் தானே என்று தாக்கியுள்ளனர்.

 

 

 

இந்த சம்பவம் நடந்து ஓய்வதற்கு முன்பே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் முப்பது வயதிற்கும் உட்பட்டவர் ஒருவர் பார்க்க குழந்தை பிடிப்பவர் போன்று இருந்தாராம். உடனே கூட்டமாக சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அவர் யார், என்ன என்று கூட துளியும் விசாரிக்காமல் அடித்து துவம்சம் செய்துள்ளனர். அடித்த அடியில் அவரது மூக்கு உடைக்கப்பட்டுள்ளது. இன்னும் மிருகத்தனமாக அவரது கண்ணையையும் தோண்டி இருக்கின்றனர். அவரது உயிர் பிரிந்தவுடன். கொஞ்சம் கூட தயக்கமின்றி, 'எல்லோருக்கும் பாடம் கற்பிக்கிறேன்' என்று அங்கே உள்ள உப்புநீரி ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திலிருந்து இறந்தவரின் கால்களைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். காவலர்கள் வந்து விசாரித்தபின்புதான் தெரிகிறது, அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று. இந்த இரண்டு ஊர்களிலும் சிறிது காலங்களாக குழந்தைகள் கடத்தல் நிகழ்ந்திருக்கிறது. அதனால், விழிப்பாக இருக்க முயன்று, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி உள்ளன என்கின்றனர்.      

  

palaverkadu murder


இச்சம்பவங்களை போன்றே கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம், பார்க்க நோஞ்சானாக இருக்கும் 27 வயது வாலிபன், அந்த வீடியோவில் அவர் முகத்தில் அப்பிராணியான ஒரு சிரிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஒரு மூட்டை அரிசி, அதில் ஒரு சார்ஜர் வயர் போன்ற பொருட்களை எல்லாம் வீடியோவில் தூக்கி தூக்கி காட்டுகின்றனர், அப்போதும் அவன் முகத்தில் அதே சிரிப்பு தான். அங்கே அவரை சூழ்ந்த கூட்டமெல்லாம் கோபமாக அவனைக் கடிந்து தாக்க ஆரம்பித்தனர். பிறகு, அவரை பக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்று அடி அடி என்று அவரை அடித்துள்ளனர். அப்படி அடிக்கும் பொழுது அதை ஒருவர் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் என்றால் பாருங்கள், அவருக்கு எத்தனை இலகுவான மனது. சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை போட்டு லைக்ஸ்களும் ஷேர்களும் வாங்க அவர் காட்டிய மும்முரம், தாக்கப்பட்ட மதுவைக் காப்பாற்ற காட்டியிருக்கலாம். ஆனால், மது கொடூரமாக கொல்லப்பட்டார். 

 

மனிதனின் சந்தேக குணம், அது கோபம் என்ற எல்லையை மீறி மிருகமாக அவனை மாற்றுகிறது. காரில் வந்தவர்கள் குழந்தையை கடத்த வந்தவர்களாகவே இருந்தாலும் கூட, அவர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களிடம் பேசியிருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். அதேபோல மதுவின் சம்பவத்தில் அவர் திருடிவிட்டார் திருடிவிட்டார் என்று, கொல்லும் அளவுக்கு அடித்துள்ளனர். அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். எதையும் திருடவில்லை, அவரின் தோற்றம் பார்க்க அழுக்காக இருப்பதால் மக்களே அவ்வாறு முடிவு செய்து இருக்கின்றனர். 

 

 

  kerala madhu


திருடனாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க நீதிமன்றம் இருக்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, மனிதனாக இல்லாமல் மிருகமாக மாறி, தவறு செய்தவர்கள் என்ற சந்தேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு தண்டனை கொடுத்திருப்பது தற்போதிருக்கும் மனிதர்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மக்களுக்கு அரசியல், சூழலியல் விழிப்புணர்வு, போராட்ட உணர்வு அதிகரிப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதன் பெயரில் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களும் வன்முறையும் பெருகியிருப்பது போனஸ். இவர்கள் யாரும் தங்களின் கோபத்தை அரசியல்வாதிகளிடமும் தேர்தலில் வாக்கு செலுத்துவதில் மட்டும் காட்டுவதாய் தெரியவில்லை. அங்கே அவர்கள் செய்த தவறுகளை எல்லாம் மறந்து மனிதாபிமானத்தை நூறு சதவீதம் காட்டுகிறார்கள். 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.