பா.ஜ.க அரசின் மூன்று வேளான் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அம்பானி-அதானி குழுமங்களின் வியாபார நிறுவனங்களை முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து போராட்டம் நடத்தின. சென்னை 'குறளகம்' அருகே இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, சி.பி.ஐ.எம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்து நம்மிடம் பேசிய ந.செல்லத்துரை, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஏனெனில், இச்சட்டம் அம்பானி அதானிகளுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்படுகிறது. இதை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறோம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களில் அரசு நேரிடையாக தலையிட முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் கொள்முதல் செய்யமுடியும், தரத்தினை அவர்கள்தான் முடிவுசெய்ய முடியும், விலையை அவர்கள்தான் நிர்ணயம் செய்யமுடியும். அவர்களுக்குள் பிரச்சனை வந்தால் அரசு தலையிடாது. அவர்களுக்கான சிண்டிகேட் ஒன்று உள்ளது. அவர்கள்தான் பேசுவார்கள். அதிலும், பிரச்சனை முடியவில்லை என்றால் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். கோர்ட்டுக்குச் சென்றாலும் விவசாயிகளுக்கு அரசு ஆதரவு தெரிவிக்காது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்றால் அவர்களுக்கு 90 நாட்களுக்குள்ளாக மாவட்ட கலெக்டர் வாயிலாகத் தீர்வு வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்கிறார்களே?
ஒரு விவசாயி விளைபொருளை விற்று உடனடியாகப் பணத்தை வாங்கி அடகு வைத்த நகையை மீட்டு, அடுத்து விதை நெல்லை தயார் செய்யும் பணியைப் பார்க்க வேண்டும். எப்ப பணம் வரும், எவ்வளவு பணம் வரும் எனத் தெரியாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைய முடியுமா?
விவசாயிகள் புயல், மழை, வறட்சி, இயற்கை சீற்றம் எனப் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் சந்தித்து, பலமுறை விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால், விவசாயத்தை சேவை மனப்பான்மையுடன் மத்திய அரசு பார்க்க வேண்டும். கல்வி, விவசாயம், மருத்துவம் ஆகியவற்றை அரசு தனியார் மயமாக்கக் கூடாது. சேவை மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிவிட்டால் இது மக்களுக்கான அரசா?
சில கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழி நடத்துவதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளார்களே?
டெல்லியில் நடக்கும் போராட்டத்தை, விவசாயிகளே ஒன்றுகூடி நடத்துகின்றனர். தொடர்ந்து போராடுகிறார்கள். இன்னும் ஆறு மாதத்திற்குத் தேவையானவற்றை எடுத்துச் சென்று போராடுவோம் என்கிறார்கள். கோரிக்கை நிறைவேறும் வரை செத்து மடிவோம் என்கிறார்கள். விவசாயிகளைத் தவறாக வழி நடத்த முடியாது. அப்படிச் சொல்வது விவசாயிகளை அவமதிப்பது போன்றது. வாழ்வாதாரத்தை இழந்து போராடுபவர்களைக் கொச்சைப்படுத்துவது, களங்கப்படுத்துவது ஒரு அரசுக்கு அழகா?
புதிய வேளாண் சட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று பாஜகவினர் கூறுகின்றனர். போராடும் விவசாயிகளை அந்த இடத்திற்கே நேரில் சந்தித்து பிரதமர் புரிய வைக்க வேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை. இதுசம்மந்தமாக பிரதமர் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெளிவான விளக்கத்தைக் கொடுக்க வேண்டியதுதானே?
அரசு அதிகாரியாக இருந்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார். அரசு அதிகாரியாக இருந்து, முதலமைச்சராக இருக்கும் அவருக்கும் இந்தச் சட்டம் பற்றி புரியவில்லை என்கிறார்களா? விவசாயிகளைப் பாதிக்கும் என்று தெரிந்துதானே அவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு என்ற சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துப் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் நான்கு விவசாயச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறது...
பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலங்களிலும் தன்மானத்தை இழந்து மாநிலத்தின் சுயஉரிமையை, மாநிலத்தின் உரிமையைப் பறிகொடுக்கிற இடத்தில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் அதுதான் நடக்கிறது. ஏதோ ஒன்று செய்து இவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைத்திருக்கிறார்கள். ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது பொய்ப் பிரச்சாரம்.
டெல்லியில் போராடக் குவிந்தவர்கள் விவரம் தெரியாதவர்களா? அவர்களுக்கு அரசியல் கட்சிகளைத் தாண்டி ஆதரவு குவிகிறது. அப்படி ஆதரவு தெரிவிப்பர்வகளும் விவரம் அறியாதவர்களா?
ஏதேதோ பொய் சொல்லி, பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். தற்போது விவசாயிகள் பிரச்சனையில் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்திக்கின்றனர். விவசாயிகள் பிரச்சனையில் அலட்சியம் காட்டுவது பா.ஜ.க ஆட்சி கவிழ்வதற்கும் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகுவதற்கும் தொடக்கமாக அமையும்.
விவசாயிகளுடன் மீண்டும் பேசத் தயார்... புதிய வேளாண் சட்டங்கள் ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருக்கிறாரே?
இப்படிப் பேசுவது நாட்டாமைத்தனம். சர்வாதிகாரத்தனம். அப்படியென்றால் எந்த அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். விலை போயிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மக்களை மதிக்காத அரசு என்பதற்கு இது ஒன்றே உதாரணம். கடும் குளிரிலும் தனது வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், இப்படிப் பேசுவது ஒரு அரசுக்கு அழகா? டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொள்ளச் சென்று கொண்டிருக்கின்றனர். போராட்டம் வலுப்பெறும். கிளர்ச்சி வெடிக்கும். புரட்சி வெடிக்கும். அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது. இன்று ஆளும் கட்சியினருக்கு எதிராகப் போராட்டம் நடக்கும். காணாமல் போவார்கள். பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறது என்ற ஆணவத்தால் இப்படிச் செய்கிறார்கள். பாஜகவுக்கான சரிவு தொடங்கிவிட்டது...