தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது இந்த குட் நைட் திரைப்படம். அப்படி என்ன அந்த புதிய கதைக்களம்? அது ரசிகர்களை ஈர்த்ததா, இல்லையா?
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அதுவும் உங்க வீட்டு குறட்டை, எங்க வீட்டு குறட்டை இல்லை அது ஒரு ராஜகுறட்டை. அவர் குறட்டை விட்டால் அருகில் இருப்பவர்களின் காது அவ்வளவுதான்.. அந்த அளவு சத்தமாக இருக்கும். இப்படி ஒரு வினோத பிரச்சனை இருக்கும் மணிகண்டனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த நேரத்தில் மணிகண்டனுக்கும் மீதா ரகுநாத்திற்கும் காதல் மலர்கிறது. அது திருமணம் வரை செல்ல தன் குறட்டை விஷயத்தை மறைத்து மீதாவை மணிகண்டன் திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்திற்கு பிறகு குறட்டை விஷயம் மீதாவுக்கு தெரிய வர அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சனை. இதையடுத்து இருவரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்கின்றனர். இதற்கிடையே இவர்களுக்குள் விரிசல் நீண்டு கொண்டே போகிறது. இதைத் தொடர்ந்து குறட்டைக்கான தீர்வை மணிகண்டன் கண்டுபிடித்தாரா, இல்லையா? இவர்களுக்குள் இருந்த விரிசல் சரியானதா, இல்லையா? என்பதை குட் நைட் படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அவருக்கு ஈக்குவலான நண்பனாக அவரின் அக்கா கணவரையே காண்பித்துள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். இந்த மாதிரி சின்ன சின்ன புதுமையான விஷயங்கள் படம் முழுவதும் படர்ந்து இப்படத்தை ஒரு சுவாரஸ்யமான படமாக மாற்றி இருக்கிறது. தேவையில்லாத இடத்தில் வரும் திணிக்கப்பட்ட காமெடி காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என எதுவுமே இந்த படத்தில் இல்லாமல் போகிற போக்கில் எதார்த்தமான ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தை கொடுத்து கவனிக்கத்தக்க இயக்குநர்களின் வரிசையில் தானும் ஒருவர் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விநாயகர் சந்திரசேகரன்.
குறிப்பாக முதல் பாதி முழுவதும் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்து ஒரு சிறிய வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் மூலம் அதை கொடுத்து படத்தை கரை சேர்த்துள்ளார். ஆனால் முதல் பாதியில் இருந்த ஈர்ப்பு ஏனோ இரண்டாம் பாதியில் மணிகண்டன் குறட்டை பிரச்சனைக்கான தீர்வை காணும் காட்சிகளில் சற்றே மிஸ் ஆகி ஆங்காங்கே சற்று அயர்ச்சி கொடுத்துள்ளது. மணிகண்டனுக்கும் மீத்தாவுக்கும் ஆன சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அவை படத்திற்கு சற்று வேகத்தடையாக அமைந்திருப்பதையும் மறுக்க முடியவில்லை. இருந்தும் கிளைமாக்ஸ்க்கு முந்தைய கட்சியில் ஆரம்பித்து படம் முடியும் வரை மீண்டும் அதே சுவாரசியத்தை ரசிகர்களுக்கு மீண்டும் கொடுத்து இப்படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
கொஞ்சம் கூட முகத்தில் நடிப்பே தெரியாத அளவிற்கு மிகவும் யதார்த்தமான நடிப்பை மிகத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் மணிகண்டன். கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் சின்ன சின்ன இடங்களில் கூட முக பாவனைகள் மூலமும் ஆன்லைன் வசனங்கள் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்து ஈர்த்திருக்கிறார். இவருக்கும் ரமேஷ் திலக்குக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நாயகி மீதா ரகுநாத் மேக்கப் இன்றி அழகாக இருக்கிறார், அளவாக பேசுகிறார், நிறைவாக நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி புரிந்துள்ளது. எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசனம் தேவைப்படுகிறது அதை சுருக்கமாக பேசி அதற்குள்ளேயே பாசம், நேசம், கோபம் ஆகியவற்றை அழகாக கடத்தி தேர்ந்த நடிகையாக திகழ்ந்துள்ளார்.
மணிகண்டனின் மாமாவாக நடித்திருக்கும் ரமேஷ் திலக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இவர் மணிகண்டனோடு அடிக்கும் லூட்டிகள் சிறப்பு. ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்திருக்கும் ரேய்ச்சல் இவர்களுக்கு நன்றாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். பல காட்சிகளில் இவரது அனுபவ நடிப்பு அழகாக வெளிப்பட்டிருக்கிறது. மணிகண்டன் குடும்பத்தில் இருக்கும் அம்மா, தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதேபோல் தாத்தா, பாட்டியாக வரும் பாலாஜி சக்திவேல் தம்பதியினர் தனக்கு கொடுத்த ஸ்பேசில் மிக அழகாக நடித்திருக்கின்றனர். எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாத நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. அதேபோல் ஐடி கம்பெனியில் வரும் ஊழியர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
சான் ரோல்டன் இசையில் சின்ன சின்ன பாடல்களாக இருந்தாலும் அவை கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் நம் மனதை வருடும்படியான இசையை கொடுத்து கேட்பவர்கள் மனதை கவர்ந்துள்ளார். வீட்டுக்குள்ளேயே நடக்கும் கதையை மிக சுவாரசியமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். இவரின் நேர்த்தியான படப்பிடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.
ஒரு சிறிய ஒன்லைன் கதையை மிக சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இரண்டரை மணி நேரம் படமாக கொடுத்து ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி இருந்தாலும் அவற்றை கிளைமாக்ஸ் நெருக்கத்தில் சரிகட்டி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படத்தை கொடுத்து கரை சேர்ந்துள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
குட் நைட் - நல்ல தூக்கம்!