Skip to main content

'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனரின் அடுத்த வேலை... - கஜினிகாந்த் விமர்சனம்

 

maniyarfamily

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி ஜானரை அறிமுகப்படுத்தி பல்வேறு தரப்பிலிருந்து திட்டுவாங்கி ஹிட் கொடுத்த சன்தோஷ் பி ஜெயக்குமார் முதல்முறையாக நல்ல ஃபேமிலி படம் கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், சில காலமாக தோல்விப் படங்களையே கொடுத்த ஆர்யாவுக்கு கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் என வெளியாகியிருக்கும் 'கஜினிகாந்த்' இருவரின் குறிக்கோளையும் நிறைவேற்றியுள்ளதா?

 

aryaரஜினிகாந்த் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பிறந்து 'கஜினி' போல மறதி கொண்டிருப்பதால் அவர் கஜினிகாந்த். மறதி நோயால் கஷ்டப்படும் ஆர்யா தனக்குள்ள பிரச்னையை எப்படி ரகசியமாக வைத்து ஹீரோயின் சாயிஷாவை காதலித்து, பின் அவர் தந்தை சம்பத்திடம் நல்ல பெயர் வாங்கி சாயிஷாவை கரம் பிடிக்கிறார் என்பதே படம். 

 

sayeeshaஆர்யாவுக்கு மிக எளிதான பாத்திரம். இயல்பாக நடித்துள்ளார், ஆங்காங்கே உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றுள்ளார். இந்தப் படத்தில் நமக்குப் பிடித்த 'பாஸ்' ஆர்யாவைப் பார்க்கலாம். ஒரு இடைவெளிக்குப் பிறகு  இது அவரின் மறுபிரவேசம் என்றே சொல்லலாம். அழகு, மெழுகு சிலை சாயீஷா அப்பாவி கதாநாயகியாக வருகிறார். நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு குறைவே. ஆர்யாவின் தந்தை ஆடுகளம் நரேன், நண்பர் சதிஷ், ஆகியோர் வரும் சில காட்சிகள்தான் படத்தின் பெஸ்ட் மொமெண்ட்ஸ். குறிப்பாக இவர்கள் பங்குபெறும் ஆள்மாறாட்ட காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. மொத்த படத்திலும் நமக்கு கிடைக்கும் ஆச்சரியம் ஆடுகளம் நரேன்தான். அதிகமாக இவரை சீரியஸாகவே பார்த்த நமக்கு இந்தப் படம் சிரிப்பு சர்ப்ரைஸ். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் எல்லோரும் தங்கள் பணியை சரியாக செய்து சிரிக்கவைத்துள்ளனர். சம்பத், வழக்கம் போலவே கோபமாக வருகிறார், அவரும் தன் பங்குக்கு சிரிக்கவைக்கிறார்.

 

gajinikanth'பலே பலே மகாதிவோய்' தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சன்தோஷ் பி ஜெயக்குமார். தெலுங்கில் உரிமை வாங்கி எடுக்கும் அளவுக்கு புதிய கதை அல்ல. சபாஷ் மீனா டூ உள்ளத்தை அள்ளித்தா, உள்ளத்தை அள்ளித்தா டூ கஜினிகாந்த் என காட்சிகள் அப்படியே ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் பொழுதுபோக்குக்கு குறைவில்லை. க்ளைமாக்ஸையாவது தமிழில் எடுக்கும்போது சற்று மெருகேற்றியிருக்கலாம். அடல்ட் காமெடி மட்டுமல்ல இப்படி ஒரு படமும் எடுக்க வரும் என நிரூபித்துவிட்டார் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர். எந்த வகை படமாக இருந்தாலும் கலர்ஃபுல்லாக காட்சி ரீதியில் தரமாக உருவாக்குவது சன்தோஷின் பலம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கும் இப்படம் ஆறுதல் வெற்றியாக அமைகிறது.

 

 


பல்லுவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல். பால முரளி பாலுவின் பாடல்களும் பின்னணி இசையும் ஓகேதான். மொத்தத்தில் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்பவர்களை வருத்தப்பட வைக்கமாட்டார் 'கஜினிகாந்த்'.

ரசிகர்களும் கஜினியைப் போலவே பழைய படங்களை மறந்துவிட்டு சென்றால் என்ஜாய் பண்ணலாம். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்