தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கு முக்கு டிக்கு தாளம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, முனீஸ்காந்த், மன்சூர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தங்கர்பச்சான், விஜித் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, பேரரசு, நடிகர்கள் நாசர், யோகி சேது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய யூகி சேது வெற்றிமாறனையும், தங்கர்பச்சானையும் ஒப்பீட்டு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "கரிசல் காட்டு இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது தங்கர்தான். கி.ராவின் வளர்ப்பு மகன் தங்கர் என்று சொல்வதைவிட, தங்கருடைய வளர்ப்பு தந்தை கி.ரா என்று சொல்லலாம் அந்தளவுக்கு கி.ராஜநாரயணனை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கர் பார்த்துக்கொண்டார். கரிசல் காட்டு இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களை சினிமாவில் கதையாக எடுத்ததில் தங்கருக்கு பெரிய பங்களிப்பு உள்ளது. உமா சந்திரனுடைய 'முள்ளும் மலரும்', 'சிறுவன் எப்போதும் புதுமை தந்து' என ஒன்றிரண்டு தமிழ் இலக்கியங்களை வைத்து படம் பண்ணியிருந்தாலும், தமிழ் இலக்கியங்களை தூசி தட்டி அதில் நிறைய சொத்துகள் இருக்கிறது எனக் கூறி, அதைத் திரைப்பட காவியமாக்கியது முதலில் தங்கர். இந்தத் தலைமுறையில வெற்றிமாறன். இந்தப் படத்தினுடைய தலைப்பு 'டக்கு முக்கு டிக்கு தாளம்', 'கண்ணன் என் காதலன்' படத்தின் பாடலில் வரும்.
தஞ்சை ராமதாஸ் உடைய கவிதைகள் சில கெட்ட வார்த்தைகள் சொல்ற மாதிரி இருக்கும். "காலும் முக்காலும் ஒன்னு உங்க அக்காளும் நானும் ஒன்னு" என்று சொல்லிருப்பார். அந்த மாதிரி வார்த்தை செறிவை எப்படி வேண்டுமானாலும் போட்டு மாத்தலாம் என்ற பெருமை தமிழுக்கு உண்டு. அதே போல் தமிழை பற்றி எல்லாம் தெரிந்து தங்கர் இந்தப் படத்திற்கு 'டக்கு மூக்கு' ன்னு தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படத்துல தங்கர்பச்சானா... இல்ல அமிதாப்பச்சனான்னு சந்தேகமா இருக்கு. ஏன்னா அந்தளவுக்கு படத்தில் ஆக்சன் நல்லா இருக்கு. விஜித் நல்ல நடிச்சிருக்காரு. தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வரவேண்டியவர்களை எல்லாம் அவர்கள் அப்பாவே படம் எடுத்த கெடுத்துவிட்ட கதையெல்லாம் நமக்கு தெரியும். ஆனால், தங்கர் அப்படி இல்லை. கஸ்தூரி ராஜாவை போல நல்ல படம் பண்ணுவார். தங்கர் நடிப்பைத் தாண்டி பன்முகத் திறமை கொண்டவர். நான் நாசரை வைத்து படம் பண்ணேன். அதுக்கு டிஸ்டிப்யூட்டர் தங்கர்தான். ரூமை திறந்து பார்த்தால் அம்மா வயிற்றில் படுத்திருக்கிற மாதிரி ஒரு ஓரமாதான் படுத்திருப்பார். அவருக்கு ஓரம்தான் பிடிக்கும். எங்க யாருக்குமே மது அருந்துவது, புகைபிடிப்பது என எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இப்படி நிறைய பேசணும்னு ஆசையாக இருக்கு, ஆனால் டைமில்லை. டைமுன்னு சொல்லும் போதுதான் நியாபகம் வருது. எங்க வீட்டுலயெல்லாம் சாமிபடம்தான் இருக்கும். ஆனால், கே.எஸ் ரவிக்குமார் வீட்ல மட்டும் பெரிய கடிகாரம் இருக்கும். அவர்கிட்ட டைட்டானிக் படத்த கொடுத்து 55 நாட்கள்ல படமாக்க சொன்னால்கூட அதை முடித்து வெற்றிப்படமாக்கக்கூடிய தகுதி அவருக்கு இருக்குது" என்றார்.