Skip to main content

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்