![writer sura](http://image.nakkheeran.in/cdn/farfuture/L5pZCuRazRJhhcdEySeUek1Cyh2a_LWBPH5plGmk-JQ/1641456246/sites/default/files/inline-images/111_128.jpg)
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இசைஞானி இளையராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
பன்னீர் புஷ்பங்கள் படத்தை உங்களில் பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இப்படத்தை பாரதி - வாசு என இரட்டை இயக்குநர்கள் இயக்கினார்கள். இதில் பாரதி என்பது இயக்குநர் சந்தான பாரதி. வாசு என்பது இயக்குநர் பி.வாசு. இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய இவர்கள், அவரிடம் இருந்து வெளியே வந்து படம் இயக்கையில், இருவரும் இணைந்து இயக்கினார்கள். பன்னீர் புஷ்பங்கள் படத்தை ஊட்டி பின்னணி கொண்ட கதைக்களத்தில் மிக அற்புதமாக படமாக்கியிருப்பார்கள். பூக்களை பறிக்காதீர்கள் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த சுரேஷுக்கு இந்தப் படம்தான் அறிமுகப்படம். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி சாந்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்தார். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி அருமையாக இருக்கும். படம் கவிதை மாதிரி இருக்கும். இசைஞானி இளையராஜாதான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அது தமிழ் சினிமாவில் இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலம். பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார் இளையராஜா. இசையமைப்பில் பணியாற்றிய பிற கலைஞர்களுக்கான சம்பளம், இசைக்கருவிகளுக்கான வாடகை மட்டுமே அவர் வாங்கியுள்ளார். இசையமைப்பாளராக உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று இயக்குநர்கள் கேட்டுக்கொண்டே இருந்துள்ளனர். நான் சொல்கிறேன் என்று சொல்லிய இளையராஜா இசை பணிகள் முடியும்வரை எதுவும் சொல்லவில்லை. பாடல், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் அனைத்தும் முடிந்தபிறகு, சார் சம்பளம் எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் சொல்லவேயில்லை என்று பி.வாசு கேட்டதற்கு சம்பளம் எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிடுகிறார் இளையராஜா. பி.வாசுவும் சந்தான பாரதியும் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்திலிருந்தே தனக்கு தெரியும் என்பதால் அவர்கள் முதல் படம் இயக்கும்பொழுது சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார் இளையராஜா.
பி.வாசு இந்த விஷயத்தைக் கூறியபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அப்படியே காலங்கள் கடந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவிடம் இந்த சம்பவத்தை பி.வாசு நினைவுகூர்ந்துள்ளார். அப்படியா எனக் கேட்டுவிட்டு எனக்கு நியாபகமே இல்லை என்று இளையராஜா கூறினாராம். இளையராஜாவின் இசைத் திறமையைக் கண்டு அவர் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பிறகு அந்த மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடிவிட்டன.