இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று (28-06-24) முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல் , நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கி வருகிறார்.
இதில் ஒரு பெண்மணியை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைத்து வந்து, விஜய் அருகில் வந்து மேடையில் பேச வைத்தும், தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றிப் பாடலை பாட வைத்ததும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அந்த பெண், தான் ஒரு ஆசிரியை என்று குறிப்பிட்டு விஜய்யையும், தமிழக வெற்றிக் கழக கட்சியையும் பாராட்டிப் பேசினார். இதனையடுத்து, விஜய் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ படத்திலிருந்து ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ என்ற பாடலில் தமிழக வெற்றிக் கழக கட்சி குறித்துப் பாட ஆரம்பித்தார்.
அதில் அவர், ‘கட்சியில் சேரனும்னு வீட்ல சொன்னேங்கண்ணா, விடலங்க விடலங்கண்ணா.. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின்னு சொன்னேங்கண்ணா, ஓகே ஓகேன்னு சொன்னாங்கண்ணா... ஊதுறோம் ஊதுறோம்ணா, எல்லா கட்சியையும் ஊதுறோம்ணா.. அப்புறம் உங்களண்ணா, முதலமைச்சர் ஆக்குரோம்ணா..’ எனக் கலகலவென பாடினார்.