கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று 'ஆஹா' தமிழ் ஓடிடி தளத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 'ஆஹா' செயலியின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் சிம்புவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இருக்கின்றனர். அனிருத் இசையில் சிம்பு நடித்திருக்கும் விளம்பரம் கூட இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.இந்த செயலியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்த கொண்ட அனிருத் பேசியது பின்வருமாறு...
"நானும் சிம்புவும் ஸ்கூலில் இருந்தே நண்பர்கள், அவர் என்னுடைய சீனியரும் கூட. அவருடன் எல்லா கல்ச்சுரல்ஸ்க்கும் நான் கீ போர்டு வாசிப்பேன். நாங்கள் எவ்வளவு நெருக்கம் என அனைவருக்கும் தெரியும். கடந்த பத்து வருடங்களில் நிறையப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது இல்லை. கண்டிப்பாகச் சொல்கிறேன் எங்கள் கூட்டணியில் படம் வரும் போது பயங்கரமாக இருக்கும்.
ஒரு விஷயம் முடிந்த பிறகு அடுத்த இடத்துக்கு போகணும் என்கிற எண்ணம் தான் எப்போதும் எனக்குள் இருக்கும். இசை நிகழ்ச்சியில் நான் பாடி முடித்த பிறகு ரசிகர்கள் திருப்பி பாடச் சொல்லுவது தான் எனக்கு ரிப்பீட் மொமெண்ட்டாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த தருணத்தில் கிடைக்கிற மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. நான் முதலில் இருந்தே தொடர்ந்து பின்பற்றுகிற விஷயம், நாம் என்ன செய்தாலும் விமர்சனம் செய்ய சில பேர் இருக்கிறார்கள். அந்த விமர்சனம் நியாயமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சனம் செய்தால் அதைத் தவிர்த்து விடலாம் என்பதுதான்.
'ஆஹா' எல்லாருக்கும் தெரியும் ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒன்று. அது தமிழுக்கு வருவது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க தமிழ்ப் படங்களும், தொடர்களும் வருகிற 'ஆஹா'-வில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் சார் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மாறும். தெலுங்கில் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழில் தொடங்கியிருக்கும் இந்த செயலி நிச்சயம் தங்கமாக மாறும்" எனப் பேசினார்.