கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்திருப்பதால் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஷாரூக்கான் தனது ரசிகர்களுடன் சிறிது நேரம் ட்விட்டரில் #AskSRK மூலமாக கலந்துரையாடியிருக்கிறார். முன்னர் ஷாரூக்கான் இவ்வாறு அடிக்கடி தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடுவார். கடந்த ஒரு வருடமாக தனது குடும்பத்துடன் பிஸியாக இருப்பதால் ஷாரூக்கான் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.
நேற்று மாலை கலந்துரையாடிய ஷாரூக், தனது ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் அலட்டிக்கொள்ளாமல் ஜாலியாகப் பதிலளித்தார். ஷாரூக்கானைக் கடுப்பேற்றும் விதமாகக் கேள்வி கேட்டவர்களை ஷாரூக்கின் நறுக் பதில்கள் கடுப்பேற்றியிருக்கும். அந்தளவிற்கு கூலாகப் பதிலளித்தார் ஷாரூக்
அந்த வகையில் ரசிகர் ஒருவர் ஷாரூக்கிடம், ‘இந்த நாட்களில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?’ என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள ஷாரூக் கான், ''நாம் அனைவரும் நம் வேகத்தைக் குறைக்க வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிலும் 24/7 உடனடித் திருப்தியை எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கையையும், இயற்கையையும் உணர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.