கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று 'ஆஹா' தமிழ் ஓடிடி தளத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 'ஆஹா' செயலியின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் சிம்புவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இருக்கின்றனர். அனிருத் இசையில் சிம்பு நடித்திருக்கும் விளம்பரம் கூட இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டது.இந்த செயலியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சிம்பு பேசியது பின்வருமாறு...
"கடவுள் எனக்காக என்ன கொடுத்துள்ளாரோ அதே எனக்கு மகிழ்ச்சி தான். திரையரங்கில் ரசிகர்கள் நம்மை பார்க்கும் போது முதல் தடவை கை தட்டும் அந்த தருணம் ரிப்பீட் ஆகணும்னு ஆசையாக இருக்கும். தமிழ் என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வருவது என் அப்பா. நமது தாய் மொழி தமிழின் அருமை, அதை எப்படிப் பேச வேண்டும், இப்படி எல்லாம் பேசலாம், என அனைத்தும் சொல்லித் தந்தார். என்னுடைய தமிழ்ப் பற்றுக்கு அவர் தான் முழு காரணம்.
இன்னைக்கு எல்லாமே டிஜிட்டல் ஆக மாறிவிட்டது. எல்லாரும் கருத்துச் சொல்லுவார்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பது முக்கியமில்லை. நம்ம நம்மை பற்றி என்ன நினைக்கிறோம் என்பது தான் முக்கியம். நம்மள நம்ம நம்பணும் என்னைப் பொறுத்த வரை அது தான் ஆத்மன் என்று நினைக்கிறேன். அதைத் தான் மக்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சினிமாவுக்கு நிறைய ஓடிடி தளம் இருக்கு, இந்த 'ஆஹா' குழுவோடு நான் இணைய காரணம், தமிழுக்கு 'ஆஹா'-வை கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவுதான். அதனால் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ஒரு விஷயத்தை இங்க கொண்டு வரணும்னு நினைச்சதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம். அல்லு அரவிந்த் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தொட்டது எல்லாம் தங்கமாக மாறுகிறது. இந்த வயதிலும் அவருடைய அயராது உழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். அதை அவரிடம் பார்த்து நான் கற்றுக்கொண்டேன். நம்ம ஏற்கனவே தெலுங்கில் ஆரம்பித்து நல்ல வெற்றி பெற்று விட்டோம் என எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், முதல் தடவை ஒருவர் ஆரம்பிக்கும் போது எவ்வளவு ஆர்வமாக இருப்பார்களோ அந்த மாதிரி தான் என்னை அணுகினார். அது எனக்கு பிரமிப்பாக இருந்தது. மொத்த 'ஆஹா' குழுவும் அதேபோல் சூப்பராக வேலை செய்கின்றனர். சின்ன சின்ன விஷயத்துக்கு ரொம்ப மெனக்கெடுகின்றனர். ஆரம்பத்திலேயே இப்படி வேலை செய்கிறார்கள், பின்னாளில் எப்படிச் செய்வார்கள் என நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கிறது. அனிருத்துடன் முதல் முறை இணைத்து பணியாற்றுவது. அதுவும் தமிழ் மூலமாக நாங்கள் இணைவது ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு" எனப் பேசினார்.