லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.