தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷாலுக்கு இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தியது, நிலப்பிரச்சனை விவகாரம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால், தனியார் விடுதியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தன்னுடைய அடுத்தடுத்த படங்கள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது, நடிகர் சூரி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால், "இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து என்னால் நிறைய பேச முடியாது. அவர் கொடுத்த புகாரில் தொடங்கி இன்று வரை நடக்கும் அனைத்தையும் ஒவ்வொன்றாக நான் கூற முடியும். நான் அவருடன் 10 வருடம் பழகியிருக்கிறேன். பின், அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லமால் ஆகிவிடும். எனக்கும் என் அப்பாவிற்கும் இதில், சம்பந்தம் கிடையாது. சில வருடங்களுக்கு முன்னால், 'என் அப்பா காலில் விழுந்து நீங்கள்தான் என்னுடைய கடவுள்' எனக் கூறிய ஒருவர், இன்று என் அப்பாவையும் என்னையும் ஃபிராடு எனக் கூறுகிறார். லாக்டவுன் ஆரம்பிச்ச சமயத்துல எங்க அப்பாவை நான் எங்கேயும் வெளியே போக அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் கோர்ட் கேஸூ, வக்கீலை போய் பார்ப்பது என ரொம்ப அலைந்தார். எனக்கே பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. உண்மை ஒருநாள் வெளியே வரும். சூரி மூலமா சம்பாதித்து நான் வாழனும்கிற அவசியம் எனக்குக் கிடையாது. என் அப்பா கூலி வேலை பார்த்து, மாடு மேய்ச்சு, படிச்சு ஒரு ஐ.பி.எஸ் ஆஃபிசரா இந்த நிலைமைக்கு வந்திருக்காரு. அவர் வாழ்க்கைல பார்க்காததையா சூரி எங்களுக்குக் கொடுக்க போறாரு. அவரை யாரோ தவறாக வழிநடத்துறாங்க; அதை அவர் முழுசா நம்புறார். இது ஐந்து வருஷத்துக்கு முன்னால நடந்த கதை. இதுல பேசுனா நிறைய பேசலாம்" எனக் கூறினார்.