தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளைவுகளை ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இக்குழு கடந்த ஜூன் மாதம் அறிக்கையை சமர்ப்பித்த நிலையில் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கான அவசர தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஆளுநரும் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இந்தச் சட்டம் காலாவதியானதால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காததால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடையில்லாத சூழல் நிலவுகிறது.
இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்த சரத்குமார், "ரம்மியை அனைவராலும் ஈசியாக விளையாட முடியாது. ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது. ஆன்லைன் ரம்மி போன்று இணையதளத்தில் ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. நான் யாரையும் கெடுக்கவில்லை. நான் சொல்வதால் அனைவரும் கேட்டு விடுவார்களா என்ன? ஓட்டு போடுங்கள் எனக் கூறினேன். ஓட்டு போடவில்லை. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் எனக் கூறியபோதும் கேட்கவில்லை. இதையெல்லாம் கேட்காத நிலையில், நான் ரம்மி விளையாடுங்கள் எனக் கூறினால் மட்டும் கேட்டு விடுவார்களா?" என நேற்று செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.
இந்த நிலையில், விஷால் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ரம்மி விளையாட்டால் எத்தனை பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும். பல பேரின் குடும்பம் இந்த சூதாட்டம் மூலம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. இப்படி பல பேரின் தற்கொலைக்குக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டாயம் தடை செய்ய வேண்டும். நம் கைகளால் உழைத்து நேர்மையாகச் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நிலைக்கும். தவறான வழிகளிலிருந்து வரும் பணம் நிலைக்காது.
சூதாட்டம் மூலம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் காசு வருவது வரலாம். நீண்ட நாள் வருவது என்பது நம்பிக்கை இல்லை. நான் சரத்குமார் சார் சொன்னது பற்றி சொல்லவில்லை. ஆபாச இணையதளங்களை எப்படி அரசு தடை செய்ததோ, அதே போல் இந்த ஆன்லைன் சூதாட்ட இணையதளத்தையும் தடை செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை. மேலும் என்னையும் இது போன்ற விளம்பரங்களில் நடிக்கக் கேட்டார்கள். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். எனக்கு அதில் உடன்பாடில்லை. அப்படி நான் நடித்தால் இன்னும் பத்து பேர் தற்கொலை செய்வதற்கு நான் காரணமாக மாறிவிடுவேன். அப்படிக் காரணமாக இருக்கக்கூடாது என நினைக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.