கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் விஷால் பேசுகையில், “எங்க சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில, வாழுகிற ஒரு மனிதனா... மேதாவி விஜயகாந்த் நடிச்ச கலைத்துறையில ஒரு நடிகனா... அவருடைய ரசிகனா... தலைவரா கேப்டன் இருந்த நடிகர் சங்கத்தில நானும் ஒரு உறுப்பினரா, பொதுச் செயலாளரா... அது போக தேமுதிக கட்சிக்கு ஓட்டு போட்ட வாக்காளனா... எல்லா வகையிலும் நான் விஜயகாந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு விஷயத்தில் எந்த பாரபட்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்தவர் விஜயகாந்த். அந்த வழியில் வந்தவர்கள் என்ற முறையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம். விஜயகாந்த் மறைவின்போது நாங்க கூட இருந்திருக்கணும். நானும் ஊரில் இல்லை. கார்த்தியும் ஊரில் இல்லை. முதலில் அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சண்முகப்பாண்டியன் கிட்ட ஒரே ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். நிறைய நடிகர்கள் மேல் வர விஜயகாந்த் ஒரு தூணாக இருந்திருக்கிறார். நான் உங்க வீட்டு பிள்ளையாக சொல்கிறேன். உன்னோட படத்தில் நான் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் வருகிறேன். அப்பா மாதிரி நீ பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பது என் ஆசை. அதை என் பரிகாரமா நான் நினைத்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலைவனை மிஸ் பண்றோம்” என எமோஷ்னலாக பேசினார்.
மேலும், “நான் ஓப்பனா சொல்கிறேன். சினிமாவில் ஈகோ என்ற விஷயம் எல்லாருக்கும் இருக்கும். இல்லாத மனிதர்கள் குறைவு. அதில் முன்னுதாரணமாக இருப்பது கேப்டன் விஜயகாந்த். திரைப்பட கல்லூரியில் இருந்து 54 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய உலக நாயகன் விஜயகாந்த். 54 பேர் வீட்டுலயும் விளக்கேற்றியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் கூட விஜயகாந்த் குறித்து குறை சொல்லமாட்டார்கள்” என்றார்.