Skip to main content

உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார் - ஆவேசமான விஷால்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

vishal reply to ex minister jayakumar statement about minister udhayanidhi stalin

 

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது மக்கள் நல இயக்கம் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில், தனது ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது விஷாலிடம் அவரது நண்பர் உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "இதனை நேரில் பார்க்க வேண்டும் எனக் கிட்டத்தட்ட 9 வருடங்களாகக் கனவாக இருந்தது. இன்னைக்கு நினைவாகியிருக்கும்போது உதயநிதியின் ஒரு நண்பனாகப் பெருமைப்படுகிறேன். இனிமேல்தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை முழுமையாக எல்லா இடத்திலும் பயன்படுத்தப் போகிறார். 

 

கடந்த 25 வருடமாக தனது தனிப்பட்ட அடையாளத்தோடு மட்டுமே வலம் வந்தவர். ஸ்டாலின் ஐயாவோட மகன் என்று எந்த இடத்திலும் அவர் பந்தா காண்பித்ததில்லை. அவரது பெயரை எங்கேயும் தவறான முறையில் உதயநிதி பயன்படுத்தியதில்லை. ஆனால் இன்றைக்கு உதயா பெயரும் அங்க்கிள்(ஸ்டாலின்) பெயரும் இணைந்து ‘உதயநிதி ஸ்டாலின் என்ற நான்...’ என பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வந்து மேலோட்டமாகத் தெரியுமே தவிர அந்தப் பதவிக்கு உதயநிதி தகுந்த அமைச்சராக இருப்பார் என முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருப்பார் என நான் நம்புகிறேன். உதயநிதிக்கு அமைச்சராக அனைத்துத் தகுதிகளும் இருக்கு என நானும் நம்புகிறேன். 

 

மக்களுக்குத் தேவையானதை செய்தாலே அது அரசியல்தான்.அந்த வகையில் அனைவருமே அரசியல்வாதி தான். அரசியல் என்பது சினிமா துறை போல் ஒரு துறை கிடையாது. சமூக சேவை செய்யக்கூடிய ஒரு இடம்" என்று பேசினார்.

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சரான பிறகு உதயநிதி திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்று கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த விஷால், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடியிருக்கக்கூடாது என்று நான் சொல்கிறேன். அவர் நிறைய மேடைகளில் பாடியிருக்கிறார். அது சினிமா பாடல்கள் தானே. அதை தவிர்த்தால் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். ஒவ்வொரு துறையிலும் பயணிப்பதா இல்லையா என்பது அவரவர் எடுக்க வேண்டிய முடிவுகள்." என ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்