தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் நேரிலும், சமூகவலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் விஷால் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் பேசியபோது...
"முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையையும் எடுத்துக் கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து கூட வாங்க முடியாமல் கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கினேன். இன்றைய சூழலில் கரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, கண்டிப்பாக ஆவன செய்து தருகிறேன் என்று உறுதியளித்தார். அத்துடன் என்னை கவனமாக இருக்கவும் அறிவுறுத்தினார். அத்தோடு முதன்முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆன திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்து கூறினேன்" என்றார்.