கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. வழக்கமாக நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும், அதன்படி நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், நாசர் தலைமையிலான அணியோ நடிகர் சங்க கட்டிடப் பணிகளை முடித்துவிட்டுதான் தேர்தல் குறித்த அறிவிப்பு இருக்கும் தெரிவித்தனர்.
இதன்படி ஆறுமாத காலம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது நடிகர் சங்க வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது இந்த அவகாசம் முடிவு பெற்றதால், ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்த ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர் சங்க நிர்வாகிகள்.
இந்தத் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், எங்கு தேர்தல் நடத்தலாம் உள்ளிட்ட அனைத்தையுமே முடிவுசெய்து அறிவிக்கவுள்ளனர்.
மீண்டும் இத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணி போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த முறை ராதாரவி தலைமையிலான அணியும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.