அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. 7 வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பட ப்ரோமோஷனுக்காக மதுரை வந்திருந்த கோப்ரா படக்குழுவினர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசுகையில்,"மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மீசை தானாகவே மேலே சென்றுவிட்டது,நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார், மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும், எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான், நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது மதுரைக்கு அடிக்கடி வருவேன், மதுரை என்றாலே நல்ல ருசியான உணவும், ஜாலியும் தான், மதுரை அமெரிக்கன் கல்லூரி குறித்து இயக்குநர் அமீர் அடிக்கடி என்னிடம் பேசுவார், ஹவுஸ்புல் பட சூட்டிங்கின் போது மதுரைக்கு வந்த நான் மதுரை பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன், சுவையான வகை வகையான உணவுகளை சாப்பிட்டேன், இன்று நான் டயட்டில் இருந்தாலும் கூட மதுரை ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன் அவ்வளவு ருசியாக இருந்தது, அந்நியன் திரைப்படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படம் கோப்ரா எனவும், மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி தான் என்பதை நிருபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள்" என்றார்.
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமா? என்று கேட்ட கேள்விக்கு நான் எப்போதும் ரசிகர்களின் செல்லம் தான் என்று அனைவரையும் அசர வைத்தார்.
சினிமாவிற்கு வருவது கடினமா? எளிமையா? என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த விக்ரம், சினிமாவுக்கு வருவது மிகுந்த கடினமானது இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம் என்றார்.