பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றும் ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் இப்படம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30ஆம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் விக்ரம், பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
அப்போது விக்ரம் பேசுகையில், “அந்த காலகட்டத்தில் அவ்ளோ கஷ்டப்பட்டு அந்த மக்கள் தங்கத்தைத் தேடினார்கள். சுலபமா கிடைக்காத அந்த தங்கம் அவர்களின் உழைப்பால் கிடைத்தது. எங்கள் பயணமும் கிட்டதட்ட அப்படி தான். அந்த இடத்தில் நாங்கள் யாரும் நடிக்கவில்லை. அந்த மக்களாகவே மாறிவிட்டோம். வெயில், குளிருக்கு நடுவில் அங்கு நாங்கள் போனோம். எல்லாத்துக்கும் முடிவாகத் தங்கத்தைக் கண்டுபிடித்தோம். அதுதான் இந்த வெற்றி. இந்த படத்திற்காக கதை சொல்ல ரஞ்சித் வரும் போது பாதி தலையை மட்டும் மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு கோவணம் கட்ட வேண்டும் என்று சொன்னார். எந்த ஒரு மெயின் ஸ்ட்ரீம் ஹீரோக்களும் இதை பண்ண மாட்டார்கள். இது எப்படி திரையில் தெரியும் என்று ஒரு பக்கம் பயமாகவும் மறுபக்கம் ஆர்வமாகவும் இருந்தது. ரஞ்சித் என்னை ஆதாமாக நடிக்க சொன்னால் கூட தயங்காமல் நடிப்பேன், அந்த பலம் எனக்குள் இருந்தது.
எனக்குத் தெரியும் என்னுடன் பணியாற்றிய சில இயக்குநர்கள் என்ன சொன்னாலும் நம்பி செய்துவிடுவேன். அதுபோலத்தான் ரஞ்சித்திடம் இதை பண்ண ஒப்புக்கொண்டேன். அவர் இல்லாமல் இந்த கதாபாத்திரத்தை என்னால் செய்திருக்க முடியாது. இந்த படத்தில் இது போன்ற சவாலான வேடத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக பண்ணினார்கள். ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் பார்த்ததில் இருந்தே அவருடன் வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தேன். ஆனால் அவர் எனக்கு இப்படிப்பட்ட ஒரு படம் கொடுத்துள்ளார், அதற்காக நன்றி. இதை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன். நான் நிறைய படங்கள் பண்ணியுள்ளேன். ஆனால், இப்படம் உண்மையும், ஆழ்ந்த சிந்தனையும் உள்ளது. நிறைய விஷயங்கள் இப்படத்தில் பேசப்படும். அதனால் ரஞ்சித்தை நேசிப்பவர்களும் வெறுப்பவர்களும் இருப்பார்கள். ஆனால், அவர்கள் ரஞ்சித்தைத் தவிர்க்க முடியாது. அதைத்தான் இந்த படத்தில் அவரும் பண்ணியுள்ளார்.
நான் எப்பொழுதும் ஒரு படத்தை நிறைய வருஷம் கிறுக்கன் மாதிரி செய்துகொண்டு இருப்பேன். வெயிட் போடுவது, குறைப்பது என அதிலேயே ஆறு மாதம் சென்றுவிடும். சில நேரம் படங்கள் வர அதிக நேரங்கள் எடுத்துக்கொள்ளும். என்னுடைய ரசிகர்கள் கொஞ்சம் சீக்கிரமாகப் படங்கள் எடுக்க சொல்லிக் கேட்பார்கள். அவர்களுக்காக ஒரே நேரத்தில் ஒரே கெட்டப்பில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என மூன்று படங்கள் பண்ணினேன். அது எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஆனால் வருத்தம் என்னவென்றால் கோப்ரா படம் சரியாக ஓடவில்லை. ஆனால் அந்த படத்தில் சில காட்சிகள் நன்றாக நடித்திருந்தேன். சில சமயங்களில் நன்றாக வேலை செய்திருந்தாலும் சரியாக போவதில்லை. ஆனால் இந்த படம் நன்றாக ஓடும்போது நான் பட்ட கஷ்டத்தை நிறைய பேர் ரசித்து என்னிடம் வந்து சொல்கிறார்கள், அது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
டிமான்டி காலனி 2 படமும் நன்றாக ஓடுகிறது. அதற்காக அருள்நிதி மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். மகான் படத்தை ஓடிடி-யில் வெளியிட்டார்கள். எனக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த படம் மக்களுக்கு எந்த அளவிற்கு பிடித்தது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. மகான் 2 என்று நான் சும்மா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தவுடன் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் நான் ஆந்திரா போனபோது என்னுடைய மற்ற படங்களின் பெயர்களுக்கு வராத அன்பு மகான் படத்தின் பெயரை சொன்னபோது வந்தது. ஓடிடி-யில் இந்த படம் போனாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதற்காக கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி. என்னுடைய பையனுடன் நடித்த படம் வெற்றியடைந்ததை ஆந்திரா வரை பேசுகிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.