விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். ஏற்கனவே இப்படத்தில் விஜய் பாடிய 'ரஞ்சிதமே', சிம்பு பாடிய 'தீ தளபதி' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது பாடலான அம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (24ஆம் தேதி) சென்னையில் நடந்தது. இதில், நடிகர் விஜய் எப்போதும்போல், தனது ஸ்டைலில் அன்பு குறித்து ஒரு குட்டி கதை சொல்லி முடிக்க, இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ராஜு, “உங்கள் போட்டியாளர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்” என கேட்டார்.
அதற்கு நடிகர் விஜய், “இது ஒரு இரண்டாவது குட்டி கதைனு வச்சுக்குங்க.. இது ஒரு உண்மை கதைனும் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்த விஜய், “1990களில் எனக்கு போட்டியா ஒரு நடிகர் உருவானாரு. முதலில் போட்டியாளரா இருந்து அப்புறம் போகபோக ஒரு சீரியஸ் போட்டியாளராக மாறினாரு. அவர் மேல; அவர் வெற்றி மேல உள்ள பயத்துல நானும் ஓடினேன். நான் போன இடத்துக்கெல்லாம் அவரும் வந்தாரு. நான் இந்த அளவுக்கு வளர காரணமா இருந்தாரு. அவர தாண்ட நானும் போட்டிபோட்டுக்கிட்டே இருந்தேன். அந்த போட்டியாளர் உருவான வருஷம் 1992. அந்த போட்டியாளரின் பெயர் ஜோசப் விஜய்” என்று சொன்னார். இதனை கேட்ட அவரின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.