இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கவுள்ளார்.
இது தொடர்பாக, முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல் , நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கும் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில், இன்று (28-06-24) விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழா நடைபெறும் மண்டபத்திற்குள் த.வெ.க தலைவர் விஜய் வருகை தந்தார். அரசியல் கட்சி தொடங்கி முதல் முறையாக விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ள விஜய், அரசியல் பேச்சு பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில் பேசிய விஜய், “10வது மற்றும் 12வது சாதனை படைத்த என்னுடைய தம்பி, தங்கைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க காரணமாக இருக்கும் பொதுச் செயலாளருக்கும், தமிழக வெற்றிக் கழக தோழர்களுக்கும் எனது நன்றி. எதிர்கால தமிழகத்தின் மாணவ, மாணவிகளான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பாசிட்டிவ் பவர் இருக்கிற மக்களை பார்க்கும் போது ஒரு எனர்ஜி கிடைக்கும். அது இன்னைக்கு காலையில் இருந்து ஒர்க் அவுட் ஆகிட்டு இருக்கு. அனைத்து துறையும் நல்ல துறை தான். நீங்கள் எதை தேர்தெடுக்கிறீர்களோ அதில் முழு ஈடுப்பாட்டோடு 100 சதவீதம் உழைப்பை போட்டாம் என்றால் வெற்றி நிச்சயம் தான். அதனால், உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள்.
தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், நமக்கு என்ன அதிகம் தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள் தேவை. தலைவர்கள் என்று அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. இப்போதைக்கு நல்லா படிங்க. மத்தத அப்புறம் பார்த்துக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அரசியலும் கரியராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா?. படிக்கும்போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும். தினமும், செய்தித்தாள் படியுங்கள். ஒரு செய்தியை ஒரு செய்தித்தாள் ஒருமாதிரி எழுதுவார்கள். அதே செய்தியை வேறு ஒரு செய்தித்தாள் வேறு மாதிரி எழுதுவார்கள். அதனால், இங்கு செய்தி வேற, கருத்து வேற என்பது குறித்து உங்களுக்கு தெரியவரும்” எனத் தெரிவித்தார்.