லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ மற்றும் சமீபத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக விஜய்யின் பேச்சு மற்றும் குட்டி கதைக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். மேலும் விழாவுக்கான பாஸ்களை விஜய் ரசிகர்கள் சிலர் வைத்திருந்தவாறு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது போலி என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் படக்குழு இசை வெளியீட்டு விழா திடீரென்று ரத்தாகியுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விழாவுக்கான பாஸ்கள் அதிகம் கேட்டு கோரிக்கைகள் வருகின்றன. மேலும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி புது அப்டேட்டுகள் வெளியிடுவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என குறிப்பிட்டுள்ளது.