ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த 2014ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதன்பின்பு ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீக்கக் கோரி மாபெரும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. குடியரசு தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிற்கு தடை விதிக்க மறுத்தது. மேலும் ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை பட்டாசு வெடித்து தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 2017ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர்கள் அப்போது ஜல்லிக்கட்டு குறித்து விஜய் பேசிய வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், "உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாச்சாரத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்கு அல்ல. தமிழர்களுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி தமிழ் என்ற ஒரு உணர்வோடு போராட்டத்தில் இறங்கியுள்ள அத்தனை இளைஞர்களுக்கும் தலை வணங்குகிறேன். இது சம்பந்தமானவங்களை வெளியே அனுப்(பீட்டா) நான் சந்தோசப்படுவேன். இவ்வளவுக்கும் காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்(பீட்டா) தமிழ்நாடு சந்தோஷமாக இருக்கும்" எனப் பேசியிருந்தார்.