உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா, இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பிரபலங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவுகின்றனர்.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக விஜய் தேவரகொண்டா, 'விஜய் தேவரகொண்டா' அறக்கட்டளையைத் திறந்தார். தற்போது இதன் மூலம் 17,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், " விஜய் தேவரகொண்டாவின் இந்த அறக்கட்டளை மூலம் இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 8,505 தன்னார்வத் தொண்டர்கள் தங்களை இதில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.
அறக்கட்டளையில் எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது'' என்று கூறப்பட்டுள்ளது.