தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவ்வப்போது ஏதேனும் பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், இந்தமுறை அரசியல் அமைப்பு மற்றும் வாக்கு செலுத்துதல் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “நமது அரசியல் அமைப்பு சரியாக இல்லை. எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிப்பதும் சரியல்ல. விமானத்தில் மும்பைக்குச் செல்வதாக இருந்தால் அந்த விமானத்தை யார் ஓட்டுவது என்று விமானத்தில் பயணம் செய்யும் 300 பயணிகள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வது இல்லை. தகுதியான விமானியை விமான நிறுவனமே அனுப்புகிறது.
ஆனால் அரசியலில் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை மக்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டுகளைப் பணம் கொடுத்தும், சாராயம் கொடுத்தும் வாங்கி விடுகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு ஓட்டுரிமை தேவை இல்லை. நடுத்தர மக்களுக்கு, படித்தவர்களுக்கு பணத்துக்கு விலை போகாதவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும். நிறைய பேர் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓட்டுப் போடுகிறார்கள்.
எனவே எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது. நமது சமூகத்தில் மாற்றம் வரவேண்டுமானால் சர்வாதிகார ஆட்சி இருக்க வேண்டும். அந்த சர்வாதிகாரி நல்லவராக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகர் இதுபோன்று அரசியல் புரிதலற்ற கருத்துகளை தெரிவிக்கலாமா என்று ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் விஜய் தேவரகொண்டா பேசியது மிகவும் சரியானது என்று தெரிவிக்கின்றனர்.