திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதுபோன்று இதுவரை நடந்த நிகழ்வில் ஜெயம் ரவி, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதனிடையே தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து வருகிற 24 ஆம் தேதி நடப்பதாகத் திட்டமிடப்பட்டது. மேலும் டிசம்பர் 23 மற்றும் 24 அன்று இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி தள்ளிப் போய் அடுத்த மாதம் 6 ஆம் தேதி (06.01.2024) சனிக்கிழமை அன்று மாலை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அனைத்து விதமான தமிழ் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதிகளில் பாடல் மற்றும் நடனக் காட்சிகள் படமாக்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மிக முக்கியமான பாடல் காட்சிக்கு சிறப்பு அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24 ஆம் தேதிகளில் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது . மேலும் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருப்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.