Skip to main content

“திரையரங்குகள் கிடைக்க ரொம்ப போட்டியாக இருந்தது” - விக்னேஷ் சிவன்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

vignesh shivan speech at Koozhangal movie press meet

 

அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருந்த படம் கூழாங்கல். லேர்ன் அண்ட் டீச் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் விருதுகளும் வென்றுள்ளது. 94வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய சார்பில் அனுப்ப தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கரின் இறுதி சுற்றுவரை சென்று பின்பு வெளியேறியது. 2021 ஆம் ஆண்டே இந்தப் படம் அனுப்பப்பட்டிருந்தாலும் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன், வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

 

அப்போது பேசிய விக்னேஷ் சிவன், "இந்த படம் எங்கள் நிறுவனத்தின் முதல் படம். ரௌடி பிக்சர்ஸ் பேனர் தொடங்கப்பட்ட போது வித்தியாசமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்தோம். அப்போது என்னுடைய வழிகாட்டியாக இருந்த ராம் சார், இந்தப் படத்தை பற்றியும் வினோத்தின் பார்வை பற்றியும் சொன்னார். இந்த படத்தை லேர்ன் அண்ட் டீச் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் கிட்டத்தட்ட தயாரித்து வைத்திருந்தனர். அதன் பிறகு படத்தை பார்த்து நாங்க வாங்கிவிட்டோம். சர்வதேச விழாக்களிலும் உலக சினிமா பார்வையாளர்களுக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். நம்மளுடைய கலாச்சாரம் அவர்களுக்கு புதுசாக இருக்கும். அழுத்தமான படமாக இருக்குமென நினைத்து வாங்கினோம். எங்களுக்கு அதிகமான பெருமையை பெற்றுக் கொடுத்த படம் இந்த படம். 

 

நிறைய சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அதைவிட இந்தியாவின் படமாக ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டது மிகப் பெரிய விஷயம். முதல் படமே இந்த அளவிற்கு வரவேற்பை பெற்றது ரொம்ப சந்தோசம். மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்களும் படம் பார்த்துவிட்டு வாழ்த்தினர். நிறைய விருதுகளுக்கு அனுப்பி அதன் பிறகு மக்களுக்கு கொண்டு வரலாம் என நினைத்தோம். தியேட்டரில் வெளியிட ஆசை தான். ஆனால் காலம் கடந்துவிட்டதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம். அது மட்டுமல்லாமல் தியேட்டர் கிடைப்பது ரொம்ப போட்டியாக இருந்தது. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் தான் திரையரங்குகளை நோக்கி செல்ல முடிகிறது. அதன் காரணத்தாலும் இதுபோன்ற படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்கள் இருப்பதாலும் ஓடிடியில் வெளியிட முடிவெடுத்தோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்