16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இறுதிப் போட்டி என்பதால், போட்டியைக் காண இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து அஹமதாபாத்திற்கு படையெடுத்தனர் ரசிகர்கள். போட்டி ரத்தான நிலையில் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பாத அவர்கள், போட்டியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கிருந்த ரயில் நிலையத்தில் படுத்து உறங்கினர்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கான இறுதிப் போட்டி இன்று அதே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே நேற்று நடக்கவிருந்த இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக ரசிகர்களைத் தாண்டி திரைப் பிரபலங்களும் அஹமதாபாத்திற்கு சென்றிருந்தனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியைக் காணவுள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், "இன்று முழு போட்டி நடக்க பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். போட்டியின் போது மழை பெய்து, அது நின்றவுடன் ஓவர்கள் குறைவாக வைத்து விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.