கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு இந்திய நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக அமலில் உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிந்த பின்னரே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை அந்தந்தத படத்தின் நடிகர்களின் வீடியோ பதிவுடன் வெளியிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்.
சுஷாந்தின் இறுதி படமான தில் பேசாராவை சேர்த்து மொத்தம் ஏழு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஜய் தேவ்கன் நடிப்பில் ‘புஜ்’, அபிஷேக் பச்சன் நடிப்பில் ‘பிக் புல்’, அக்ஷய் குமார் நடிப்பில் ‘லக்ஷ்மி பாம்’, அலியா பட் நடிப்பில் ‘சதாக் 2’, விஜுத் ஜாம்வால் நடிப்பில் ‘குதா ஹஃபீஸ்’ மற்றும் குணால் கெமு நடிப்பில் ‘லூட் கேஸ்’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த படங்கள் எப்போது ரிலீஸாகும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த படங்களின் அறிவிப்பு தொடர்பாக நடைபெற்ற புரோமோஷனில், விஜுத் ஜாம்வால் மற்றும் குணால் கெமு உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பயன்படுத்தாமல் மீதமுள்ள படங்களின் முன்னணி நடிகர்கள் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் இதை குறிப்பிட்டு விஜுத் ஜாம்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ பெரிய அறிவுப்புதான்... 7 படங்கள் ரிலீஸ் குறித்து வெளியாகும் அறிவிப்பில் 5 படங்களுக்குதான் ரெப்ரசண்டேஷ்ன் இருக்கிறது போல், மீதமுள்ள 2 படங்கள் அதுகுறித்து எந்தவித இன்விடேஷன் கூட பெறவில்லை. சுழற்சி இன்னும் தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.