ஜி.வி பிரகாஷ், பாராதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறனும் கலந்து கொண்டார் . அவர் பேசுகையில், “இந்த படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கு. விடுதலை படத்தில் பாராதிராஜா சார் நடிக்க வேண்டும் என அவருக்கு ஹேரெல்லாம் ஷார்ட்டா கட் பண்ணிட்டு லுக் டெஸ்ட் எடுத்தேன். அப்புறம் லொகேஷன் பார்த்துட்டு, அந்த இடம் ரொம்ப குளிரென்றதால அவருக்கு சரியா வராது என சொன்னேன். என்னடா விளையாடுறியா, முடியெல்லாம் இப்புடி வெட்டிவிட்டுட்டு ஒத்துக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டார். என்ன ஆனாலும் நான் பண்றேன் என்றார். அப்புறம் நான் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன்.
கொஞ்ச நாள் கழிச்சு, டேய், என்ன வேணான்னு சொன்னில்ல, இப்ப இதே கெட்டப்புல என்னை வைச்சி ஒருத்தன் படமெடுக்க போறான் என சொன்னார். அது தான் இந்த படம். நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்துல தான் இதே படமும் ஷூட் பண்ணாங்க. பாராதிராஜா சார், ஸ்க்ரீனில் இருக்கும் ஒரு தருணம் கூட ஃபேக்கானதா இருக்காது. அந்த மாதிரி சின்சியரான நடிகர்கள் குறைவாகவே இருக்காங்க. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. எந்த நொடியுமே நடிக்க முயற்சி பண்ணாமல், அந்த இடத்தில் அந்த கதாபாத்திரமாகவே இருப்பதால் தான் அந்த உணர்வை நம்முள் ஏற்படுத்த முடியுது.
இன்னொரு விஷயம். இது கொஞ்சம் சர்ச்சையானது. யானைய வைச்சு எடுத்தாலும் டைனோசரை வைச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என்றார்.