முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் சிவாஜி நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், 1952 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பராசக்தி'. இப்படம் வெளியாகி 70 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் சிறப்பு திரையிடலோடு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், "நம்ம தமிழ் சினிமா சூழலில் அல்லது தமிழ்நாட்டுச் சூழலில் சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க நினைப்பவர்கள், அவர்களுக்கு சிறந்த 5 படங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனும் சொல்லும் பட்சத்தில், அதில் பராசக்தி கண்டிப்பா ஒரு படமாக இருக்கும். இப்படத்தைப் பார்த்தபோது அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி மக்களுக்குப் பெரிய பலனைக் கொடுக்காது என்ற அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது.
எல்லா நிலைகளிலும் எளிய மனிதர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகச் சூழலில் பார்த்தால் சாதிய அடிமைத்தனம், குடும்பச் சூழலில் பார்த்தால் பெண் அடிமைத்தனம் எனப் பல நிகழ்வுகளை சொல்லலாம். அவை அனைத்தும் இப்படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்கான தொடக்க சினிமாவாக இப்படம் இருந்தது. அப்படி ஒரு முக்கியமான படம் பராசக்தி.
இன்றளவும் இப்படம் பொருந்திப் போகுது. அதே சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவை அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நிறைய விஷயங்கள் இருக்கு. இப்படம் இன்னும் 30 வருடம் 50 வருடம் கழித்தும் தொடர்புடையதாக இருக்கும். இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. 70 வருடம் கழித்து அதைக் கொண்டாட வேண்டிய இடத்தில் இருக்கோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.