இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கெளதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்சஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஒரு குறும்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், "இதயம் மட்டும் எப்போதும் பிறப்பதற்கு முன்னரே துடிக்கத் தொடங்கி விடுகிறது. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமே ஃபிட்னெஸ் கிடையாது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு நாளுக்கு 70 சிகரெட் பிடிப்பேன். பின்பு இயக்குநராக மாறிய பின் 150 சிகரெட் வரை பிடிப்பேன்.
இதனால் படங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. இதனால் உடனே சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டேன். இன்றைய சூழலில் உணவு பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது." என்றார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புகை பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதிதான். ஆனால் அதைவிட அதிகமாக சமூகத்தில் பார்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சினிமாக்களில் அந்த காட்சிகள் தவிர்க்கப்படுவதால் மட்டும் போதை பழக்கங்கள் குறையும் என்று கூறமுடியாது. என்னுடைய படங்களில் கதாநாயகர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் நான் எடுத்ததில்லை. அது எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இருக்க வேண்டும். விடுதலை அப்டேட் அப்புறமாக சொல்கிறேன்" என்றார்.