இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சென்னை இலக்கியத் திருவிழா - 2023ல் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார்.
பல்வேறு விஷயங்களைப் பேசிய வெற்றிமாறன் ஓடிடி குறித்தும் திரையரங்குகள் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “3 வருடங்களுக்கு முன்பு ஓடிடி குறித்து ஒரு பெரிய சுதந்திரம் இருப்பது போலத்தான் தோன்றியது. இப்போது நான் சொல்கிறேன், திரையரங்கில் இருக்கும் சுதந்திரம் வேறு எந்த வடிவத்திலும் வராது. ஓடிடிக்கு படங்களைக் கொடுக்கும் போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். அதுவே திரையரங்கில் வெளியாகும் போது, அது சம்பாதிக்காமலும் போகலாம்; தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்தச் சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது.
மேலும், ஓடிடி நிறுவனம் வருங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஜானரை சொல்லி, இந்த ஜானரில் தான் படங்களைப் பண்ண விரும்புகிறோம் என கண்டிஷன் போட்டு விடுவார்கள். இதனால் நாமும் அந்த ஒரு ஜானரில் எப்படி படம் பண்ணுவது என்பதை நோக்கி சிந்திக்க தொடங்கிவிடுவோம். எல்லா ஓடிடி தளத்திலும் அவங்க சொல்கிற படங்கள் தான் இருக்கிறது. நாளடைவில் அவர்கள் விரும்பிய படம் மட்டும் தான் இருக்கும். அந்த நிலைக்குப் போகக் கூடாது. மக்களுக்கான சினிமாவின் முழு சுதந்திரம் மக்களுக்காக எடுத்து மக்களிடம் திரையிடப்படும் போது தான் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்" என்றார்.