Skip to main content

“தமிழ் படைப்பாளிகளை கேள்விக்கு உட்படுத்துகிற மாதிரி இருக்கு” - தேசிய விருது குறித்து வெற்றிமாறன்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

vetrimaaran about national award

 

சென்னை வளசரவாக்கத்தில், தமிழ் ஸ்டூடியோ சார்பில் பியூர் சினிமா புத்தக அங்காடி திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், புத்தக அங்காடியைத் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது தேசிய விருதுகள் குறித்துப் பேசுகையில்,  "தேசிய விருதுகள் குறித்து மற்றவர்கள் பேசுவதைத் தாண்டி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு படத்தை ஒரு தேர்வுக்காக அனுப்பும் பொழுது, அந்த தேர்வுக் குழுவின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் அதன் முடிவுகளுக்கு ஒப்புக்கொண்டும் தான் அனுப்புகிறோம். அந்த தேர்வுக்குழு சிறந்ததா, சரியாகத் தேர்வு செய்யுமா என்பது அடுத்த கட்டம். 

 

அந்த தேர்வுக் குழுவின் முடிவு, நிச்சயமாக ஒரு படத்தினுடைய தரத்தையோ, சமூகத்துக்கு அந்த படம் தரும் பங்களிப்பையோ தீர்மானிக்காது. குறிப்பாக ஜெய் பீம் படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த படம் என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதோ அதை அந்த படம் செய்துவிட்டது. ஒரு தேர்வுக் குழுவின் முடிவை கேள்வி கேட்க வேண்டும் என்றால், அந்த போட்டிக்கு ஒரு படத்தை அனுப்புவது சரியாக இருக்காது. அந்த தேர்வுக் குழுவின் நடுவர்களில் ஒருவருடைய விருப்பு வெறுப்பு என்பது அந்த குழுவினுடைய விருப்பு வெறுப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

 

அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் போய்விட்டார் என்பதற்காக நிறைய தமிழ் படங்களுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பது, படத்தினுடைய தரத்தையோ, தமிழ் படைப்பாளிகளையோ கேள்விக்கு உட்படுத்துகிற மாதிரி இருக்கு. அந்த குழு என்ன தீர்மானிக்கிறார்களோ அதை பொறுத்து தான் அதன் முடிவு. இது தேசிய விருது குழுவிற்கு மட்டும் அல்ல, எந்த விருது குழுவாக இருந்தாலும் சரி, அவங்க தேர்ந்தெடுக்காததாலேயே அந்த படம் சிறந்த படம் என இல்லை என்று ஆகிவிடாது" என்றார். 

 

மேலும், "உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி எனச் சொல்வது வன்முறையை தூண்டுகிற செயல் தான். விடுதலை இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்