வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து 'கஸ்டடி' படத்தை இயக்கி உள்ளார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 5 ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 12 ஆம் தேதி (12.05.2023) திரைக்கு வரவுள்ளது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. அண்மையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் நாக சைதன்யா, க்ரீத்தி ஷெட்டி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய வெங்கட் பிரபு வாரிசு பட இசை வெளியீட்டில் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் பேசியது போல் தெலுங்கில் பேசினார். அவர் பேசுகையில், "ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி.. ஆக்ஷன் வேணுமா, ஆக்ஷன் உந்தி.. பெர்பாமன்ஸ் வேணுமா, பெர்பாமன்ஸ் உந்தி.. என்ன வேணுமோ எல்லாமே உந்தி.." என்றுள்ளார்.
அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசிய அவர், "இது என்னுடைய முதல் தெலுங்கு படம். அதனால் எல்லாருடைய ஆதரவும் கண்டிப்பாக வேண்டும். அடுத்த பட விழாவில் நிச்சயம் தெலுங்கில் பேசுகிறேன். அப்படம் ஒரு வேளை கஸ்டடி பார்ட் 2வாக கூட இருக்கலாம்" என்றார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.