இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் என பலர் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கிலும், ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியது. இதையொட்டி படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். வெங்கட் பிரபுவிடம், தமிழக வெற்றிக் கழகத் தலைவருடன் படம் பண்ணியிருக்கீங்க, உங்க குடும்பத்திலிருந்து த.வெ.க. சார்பில் ஒரு எம்.எல்.ஏ வருவாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “இந்த கேள்வியெல்லாம் விஜய் சாரிடம் கேட்க வேண்டியது. ஏன் என்னிடம் கேட்குறீங்க. அப்படியே விஜய் சார் கட்சியில் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் சேர்ந்தால், உங்களுக்கு எதுக்கு நான் சொல்லனும். என் குடும்பத்திலிருந்து எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்வார்கள். அது ஏன் உங்களுக்கு. உங்க வீட்ல எதாவது பிரச்சணைனா நான் எதாவது கேட்குறனா. எங்க வீட்ல பிரச்சனைனா மட்டும் ஏன் கேட்குறீங்க” எனப் சற்று கடுப்பாகி பதிலளித்தார்.
பின்பு அவரிடம் விஜய்யிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்டக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எப்படி ஒழுக்கமா ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். சூப்பர் ஸ்டார் லெவலில் இருக்கும் ஒரு நடிகர், எந்த இடத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எளிமையாக இருந்தார். முதலில் அவரிடம் எப்படி வேலை வாங்குவது எனப் பயந்து கொண்டு இருந்தேன். ஆனால் அதை அவர் ஈஸியாக ஆக்கிவிட்டார். அந்த அளவிற்கு ஒரு நல்ல சூழலை நமக்கு கொடுத்துவிடுவார்” என்றார்.