மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர்.
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது வடிவேலு பேசுகையில், "இக்கதையில் எனக்கு நடிக்க நிறைய வாய்ப்பிருந்தது. நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை. இப்படத்துக்கு முழுக்க முழுக்க மாமன்னன் மாரி செல்வராஜ் தான். இப்படிப்பட்ட கதையை பெரும் பொருட்செலவில் உருவாக்க முன்வந்த உதயநிதி மன்னாதி மன்னன். நான் ஒரு சாதாரண குறுநில மன்னன்.
இப்படத்தில் 30 படம் பண்ண ஒரு இயக்குநரின் அனுபவத்தை மாரி செல்வராஜிடம் பார்த்தேன். வாழ்க்கையில் அதிகமா கஷ்டப்பட்டு, பட்டினி பசியாக இருந்து போராடி வந்தவர். கிட்டத்தட்ட நானும் அப்படித்தான். அதுக்காக சம்பளம் வாங்குறீல்ல... என கேட்பார்கள். அதுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
மாரி செல்வராஜின் வலியை அழகாக வெளியில் சொல்லியிருக்கிறார். அந்த வலி நம்மளுக்கு ரொம்ப கனெக்ட் ஆகும். அவரோட வலியுடன் சேர்த்து மத்தவங்களுடைய வலியும் இப்படத்தில் இணைந்தது. எனக்கு சிரிக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்ட படம் இந்த படம் தான். பின்பு எனக்குள் ஒரு போட்டி வந்துடுச்சு. காமெடி பண்ற வடிவேலுவுக்கும் சீரியஸான வடிவேலுவுக்கும் ஒரு சின்ன சேலஞ்ச். எந்த இடத்திலும் சிரிச்சிடக் கூடாதுன்னு போராடுறேன். படம் முழுக்க அதையே தொடர்ந்தேன்" என்றார்.