சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் படக் குழுவோடு நடிகை ஊர்வசி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வில் ஊர்வசி பேசியதாவது. “இந்த தலைப்புக்கான காரணம் என்ன என்பதை ஷூட்டிங்குக்கு முன் தான் இயக்குநர் என்னிடம் தெரிவித்தார். சினிமா சாதி, மதம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. இந்தப் படம் ஒரு நல்ல மெசேஜ் சொல்கிறது. நடிகைகள் காமெடி செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அந்த கதாபாத்திரங்களை விரும்பி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் செய்யும்போது நீங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வீர்கள் என்பதும் ஒரு கேள்வி. மூட நம்பிக்கைகள் எந்த வகையிலும் இருக்கக்கூடாது.
சிரிக்கக் கூடிய எந்தத் தருணத்தையும் நான் இழப்பதில்லை. அதுதான் என்னுடைய இளமையின் ரகசியம். சிரிப்பை மட்டும் தான் யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. சிரிப்பை மட்டும் எப்போதும் விட்டுவிடாதீர்கள். அனைத்து நடிகர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. கலையரசன் இன்று மலையாளத்திலும் நல்ல பெயர் எடுத்துள்ளார். அந்தக் காலத்தில் தமிழ் குடும்பங்களில் இருந்து பெண்கள் சினிமாவுக்கு வர சிறிது அச்சப்பட்டனர். அதனால்தான் மற்ற மொழிகளிலிருந்து நிறைய நடிகைகள் வந்தனர்.
திறமையானவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இன்று சினிமா எடுக்க கோடிகளில் பணம் செலவழிக்கப்படுகிறது. இந்தப் படம் நிச்சயம் உங்களுக்குப் பிடித்த மாதிரி இருக்கும். இதில் நடித்த நடிகர்கள் பலரும் பிசியாக இருந்ததால் பல காட்சிகளை எங்களால் எடுக்க முடியவில்லை. சினிமா எடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ரிஸ்க் எடுத்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நான் பாராட்டுகிறேன். அன்புக்கும் நட்புக்கும் எந்த பேதமும் இல்லை என்பதையே இந்தப் படம் பேசுகிறது.