உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்துள்ள 'கப்ஜா' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் மற்றும் திரையுலகம் குறித்து பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நடிகர் உபேந்திரா பகிர்ந்து கொள்கிறார்.
நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்காத, நல்ல இயக்குநர்கள் கிடைக்காத ஆரம்ப காலத்திலிருந்தே ஏதாவது வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் வகையிலான படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதுதான் இன்று கப்ஜா வரை தொடர்கிறது. பீரியட் படங்களை எடுப்பது மிகவும் கடினமான பணி. அந்தப் பணியை கப்ஜா படத்தின் இயக்குநர் சந்துரு மிகத் திறமையாக செய்திருக்கிறார். பீரியட் படங்களின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் படத்தில் நான் நடித்தபோது அதை மிகவும் ரசித்து செய்தேன். இயக்குநராக அறிமுகமாகி அதன் பிறகு என்னை நானே ஹீரோவாக வைத்து இயக்கி வந்தேன். பிறகு வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் நான் நடிக்கும்போது முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகுதான் நடிகராக இருக்கும்போது எனக்குள் இருக்கும் இயக்குநரை நான் அமைதிப்படுத்தினேன். இயக்குநர் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
தமிழில் எனக்கு ரஜினி சார் படங்கள், கமல் சார் படங்கள், பாலச்சந்தர் சார் படங்கள், மணிரத்னம் சார் படங்கள், ஷங்கர் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். என்னுடைய அடுத்த படத்தின் கதை எனக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் இருக்கும் பிணைப்பு குறித்த ஒன்று. நான் தொடங்கியிருக்கும் கட்சியில் கூட ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கும் உரிமை ரசிகர்களிடம் தான் இருக்கிறது. தற்போது ஓடிடியின் வருகையால் திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது வருத்தமாக உள்ளது. ஆனால் 'கப்ஜா' படத்தின் பிரம்மாண்டம் பெரிய திரையில் காணும்போது உங்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் என்பது உறுதி. எனவே இந்தப் படத்தை நிச்சயம் தியேட்டரில் பாருங்கள்.