மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர்.
இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர்.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி, "மாரி செல்வராஜ் சொன்ன கதையை நம்பி முதல் நாளில் இருந்து சரியாக எங்கள் வேலையை செய்தோம். என்னுடைய முதல் படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் போலவே இப்படத்திற்கும் கிடைத்தது. இப்படத்தை தமிழ்நாட்டில் முதலில் 510 ஸ்க்ரீனில் மட்டும் தான் திரையிட்டோம். ஆனால் இரண்டாவது வாரமும் கிட்டத்தட்ட 470 ஸ்க்ரீனில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்ளோ பெரிய வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.
நான் கூட இந்த மேடை தான் கடைசி சினிமா மேடை என்று நினைச்சேன். ஆனால் கண்டிப்பாக 50வது நாள் கொண்டாட்டமும் உண்டு. அதில் அனைவருக்கும் ஷீல்டும் கொடுக்கப்படும். படத்தில் இண்டர்வெல் சீனை பத்தி நிறைய பேர் பேசுறாங்க. மொத்தம் 3 நான் பிளான் பண்ணி தள்ளிப்போய் 5 நாள் எடுத்தோம். இப்படத்தின் சண்டை காட்சிகளில் நாங்க பயன்படுத்திய துப்பாக்கியை தவிர அத்தனையுமே ஒரிஜினல். எதுவுமே டம்மி கிடையாது" என்றார்.