ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கல்வி மற்று போலீஸ் என்கவுன்டர் குறித்துப் பேசியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ.240 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது த.செ.ஞானவேல் பேசுகையில், “நம்பிக்கையில் இருந்துதான் இந்தப் படம் தொடங்கியது. அதனால் நன்றியில்தான் முடியும். ஜெய் பீம் படத்திற்கு பிறகு என் மேல் நம்பிக்கை வைத்து அழைத்த ரஜினிக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை. ஜெயிலர் மாதிரி ஒரு பெரிய ஹிட்டுக்கு பிறகு கதைக்கு முக்கியத்துவமுள்ள படம் நடிப்பதற்கு பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது.
படைப்பு சுதந்திரத்தோடு ஒரு படம் வெளி வருவது ரொம்ப முக்கியம். என்னுடைய படைப்பு சுதந்திரம் எங்கேயும் இந்தப் படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. அதனால் இதன் நிறை குறைகள் எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. இந்தப் படத்தை பெரிய ஸ்டார், ரசிகர் பலம் எல்லாத்தையும் தாண்டி மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மீடியாவுக்கு பெரிய பங்கு. அங்கிருந்து வந்ததால் அதனுடைய பலம் என்ன என்பது எனக்கு தெரியும். அது ஒரு யானை பலம். அதை ரொம்ப பக்கத்தில் இருந்து அதில் ஒருவனாக நின்று பார்த்திருக்கிறேன். இப்போதும் கூட அந்த குணம் உயிர்ப்போடு இருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் வேட்டையன் போன்ற படத்தை பண்ண முடிந்தது. நாம் எழுதுகிற நான்கு விஷயத்தில் இரண்டு விஷயங்கள் எதோ ஒரு விதத்தில் மக்களுக்கு பயன்படும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். பத்திரிக்கையாளனாக இருந்து சினிமாவுக்கு வந்தாலும் அதை விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.