வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., அரசியலைத் தாண்டி அவ்வப்போது திரைப்படங்களையும் பார்த்து, அப்படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார். கடைசியாக மாரி செல்வராஜின் வாழை படத்தை பார்த்து விட்டு மாரி செல்வராஜின் இல்லத்திற்கு சென்று அவரை பாராட்டியிருந்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், “போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு. விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம்” என படத்தில் வரும் பல்வேறு விஷயங்களை மேற்கோள்காட்டிப் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், வாழை படத்தை பாராட்டிய திருமாவளவன் தங்கலான் படத்தை பாராட்டவில்லை என ஒரு விமர்சனம் இருப்பதாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “படத்தை பார்த்த பிறகு தானே பாராட்ட முடியும். அதனால் பார்த்த பிறகு பாராட்டுவோம்” என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான வாழை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். வாழை படத்திற்கு முன்பு கடந்த 15ஆம் தேதி வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் வெளியாகியுள்ள இப்படம் ரூ.100 கோடியை கடந்து வசூலித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.