
சென்னை அண்ணாசாலையில், கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் ‘எருமை மறம்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு நூல் வெளியிட்டார். இயக்குநர் பா.ரஞ்சித் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பேசுகையில் ‘எருமை மறம்’ நூலில், ‘எதிரியின் கொட்டம் உரையால் மட்டுமல்ல நம் கலையாலும் அடங்கும்’ என்ற வரியை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், “எதிரிகள் கொட்டம் சிறுத்தைகளால் மட்டும் அல்ல ரஞ்சித் படையாலும் அடங்கும் என்ற பொருளால் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அரசியல் களத்தில் சிறுத்தைகள் திருப்பி அடிக்கிறார்கள் என்றால், கலையுலகத்தில் இப்போது அடிக்கு அடி, நொடிக்கு நொடி, திருப்பி அடிக்கக்கூடிய படையை உருவாக்கியிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதில் உண்மை அடங்கியிருக்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது. வரலாற்றின் கட்டாயமாக இருக்கிறது. 80-களிலே கலைத்துறை இயக்குநர் பாராதிராஜா கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இயக்குநர் ரஞ்சித்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்றார்.