Skip to main content

“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

panneer selvam


கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசு 50 சதவீதப் பார்வையாளர்களைக் கொண்டு கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சில மாநில அரசுகள் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கவில்லை.

 

விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் உரிமையாளர்கள், திரையரங்குகளை திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருவதாலும், தியேட்டர் அதிபர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டும், தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது.

 

அரசு கேட்டுக்கொண்டபடி, அனைத்து தியேட்டர்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் மீது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

 

தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் பறவை காய்ச்சல் பரவியபோது அமைச்சர்கள், பொதுமக்களுடன் அமர்ந்து கோழிக்கறி சாப்பிட்டு, பொதுமக்களின் பயத்தைப் போக்கினார்கள்.

 

அதுபோல் பொதுமக்களுக்குப் பயம் வராமல் இருக்க அவர்களுடன் நடிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்