என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம், மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் டிஐஜி ஜியாவுல் ஷேக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான், "நமக்கெல்லாம் காலம் காலமாக உணவு தந்து கொண்டிருக்கும் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி தவிர தமிழகத்தின் எந்த ஒரு கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் களத்தில் இறங்கவில்லை. 24,000 ஏக்கர் மூன்று பருவங்களும் விளையக்கூடிய விளைநிலங்கள் அழித்தொழித்து மக்கள் வெளியேற்றப்படுவதை ஏன் எவருமே கண்டு கொள்ளவில்லை? சிறு சிறு சிக்கல்களை எல்லாம் ஊதிப்பெருக்கி அரசியல் தொழில் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீடியோ மூலம் பேசிய அவர், "என்.எல்.சி. நிர்வாகம், மறுபடியும் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடிய வேலையை இன்றைக்கு தொடங்கியிருக்காங்க. அந்த நிலங்கள், உலகம் தோன்றிய காலங்களில் தொடங்கி மக்களுக்கு உணவு கொடுத்துக்கிட்டு இருக்கு. ஏற்கனவே பிடுங்கப்பட்ட நிலங்கள் போதாது என்று மறுபடியும் இந்த வேலையை ஆரம்பிச்சுருக்காங்க. இதை யாருமே கண்டுக்கவில்லை. நாமெல்லாம் எதை எதையோ பேசிக்கிட்டு இருக்கோம், எதை எதையோ பண்ணிக்கிட்டு இருக்கோம்.
தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் 100க்கும் மேற்பட்டவை இருக்கும். ஆனால் ஒரு சங்கம் கூட அங்கு களத்தில் நிற்கவில்லை. அவர்கள் எல்லாம் தொலைக்காட்சியில் விவாத மேடைகளிலும், டெல்லியில் போராட்டம் நடத்தியும் விளம்பரம் தேடிக் கொள்ளத்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் என்ன வேலை. விவசாய சங்கங்கள் எதுக்கு இருக்கு. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை வரும் போது விவசாயிகள் வர வேண்டும். அது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகளுக்குப் பிரச்சனை என்றால் உடனே எல்லாரும் துள்ளுறீங்க. தஞ்சாவூர்ல நடந்தா டெல்டா மாவட்டமே போச்சு என்கிறீர்கள். அப்போ கடலூரில் நடந்தா அது பிரச்சனையே இல்லையா.
ஒரே ஒரு கட்சி மட்டும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சி மட்டுமா தேர்தல் களத்தில் நிற்கபோகுது. வெட்கமே இல்லாமல் அரசியல் கட்சிகள் என்ன பண்ண போகிறீர்கள். நாக்கை தொங்க போட்டு ஓட்டு கேட்க மட்டும் அங்கு வருவீர்கள். பாதிக்க படுகிற மக்கள் அதற்கான பாடத்தை கொடுப்பாங்க" என்றார்.
நமக்கெல்லாம் காலம் காலமாக உணவு தந்து கொண்டிருக்கும் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி தவிர தமிழகத்தின் எந்த ஒரு கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் இறங்கவில்லை. (1/2) pic.twitter.com/xc4tbA9mGE— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) July 26, 2023