
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் தமன், தமிழில் சமீபத்தில் அறிவழகன் - ஆதி கூட்டணியில் உருவான சப்தம் படத்தில் இசையமைத்திருந்தார். இப்போது சஞ்சய் ஜேசன் இயக்கும் படம், அதர்வா நடிக்கும் இதயம் முரளி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இதயம் முரளி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.
இவர் இசையில் இந்தாண்டு முதல் படமாக வெளியானது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவான கேம் சேஞ்ஜர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகாதது குறித்து பிரபல ஆங்கில ஊடக பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “யூட்யூபில் நான் போட்ட தெலுங்கு பாடல்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ‘புட்ட பொம்மா’ பாடல் இப்போது வரை 910 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
ஒரு பாடலை 50ல் இருந்து 100 மில்லியன் பார்வையாளர்கள் வரை சென்றடைய என்னால் உருவாக்க முடியும். ஆனால் அதன் பிறகு அந்த பாடல் வெற்றி பெறுவது அதில் இருக்கும் ஹூக் ஸ்டெப்பினால் தான். அந்த ஹூக் ஸ்டெப் தான் கேம் சேஞ்ஜர் படத்தில் நான் மிஸ் செய்தேன். அந்த படத்தில் எந்த பாடலிலும் சரியான ஹூக் ஸ்டெப் இல்லை. ஆனால் ‘அலா வைகுண்டபுரம்’ படத்தில் எல்லாப் பாடல்களுக்கும் ஹூக் ஸ்டெப்ஸ் இருந்தது. அதுதான் அதிக பார்வையாளர்கள் பெற உதவியது. இசையமைப்பாளரைத் தவிர்த்து, ஹீரோவும் டான்ஸ் மாஸ்டரும் பாடலின் ஹூக் ஸ்டெப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் அதுதான் ரீல்ஸில் ஹிட்டடிக்கும்” என்றார்.