Skip to main content

“நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் சுசாந்த்”- பிரபல நடிகர் உருக்கம்!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020
sushant singh rajput


எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும், தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா சுசாந்தின் மரணம் குறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் வாராங்கல் நகரில் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்தபோது 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்' ஆகிய (சுஷாந்தின்) படங்கள் வெளியாயின. சுஷாந்த் டி.சி.இ. கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர். அது இந்தியாவில் முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று.

இந்திய அளவில் அதற்காக நடைபெற்ற பொறியியல் நுழைவுத்தேர்வில் சுஷாந்த் 7-வது இடத்தைப் (தேசிய அளவில்) பெற்றார். தனது பொறியியல் பட்டம் பெற ஒரு வருடம் இருக்கும்போது அவர் கல்லூரியிலிருந்து வெளியேறினார். இது தெரியவந்ததும் அவர் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக மாறினார்.

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திலிருந்து வந்த அவர் நடிகரானதை விட படிப்பைப் பாதியில்விட்டது மிகப்பெரிய விஷயம். அவரை நான் ஆதர்சமாக எடுத்துக் கொண்டாலும் எனக்குப் படிப்பை விடும் அளவு துணிச்சல் வரவில்லை.

எனது போராட்ட நாட்களிலும், அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், அவரது நடனம், உடலை அவர் வைத்துக் கொண்ட விதம் என நான் அவரையே உந்துதலாக எடுத்துக்கொண்டேன்.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து, கல்லூரியில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பாலிவுட்டின் நட்சத்திரமாக உயர்ந்திருக்க வேண்டுமென்றால் அவர் எவ்வளவு மன வலிமை பெற்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவரை மிகவும் பிடித்துப்போனதால் அவரது திரைப்படங்கள் எதையும் திரையரங்கில் பார்க்காமல் விட்டதில்லை.

எனக்கு மனவலிமை தந்தது, வாழ்க்கையில் நம்பிக்கை தந்தது, வாழ்க்கையில் நாம் எவ்வளவு நேர்மறையாக இருக்க வேண்டும் என்று காட்டியது எல்லாம் சுஷாந்த்தான். இப்போது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பார்க்கும்போது, நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் சுஷாந்த். உங்களை ஆதர்சமாக நினைக்கும், உங்களிடமிருந்து உத்வேகம் பெறும் பலரை ஏமாற்றிவிட்டீர்கள்.

தோனி திரைப்படம் வெளியானபோது உங்களை உதாரணம் காட்டி நான் எனது அம்மாவுடன் சண்டையிட்டேன். இது நியாயமே இல்லை. தயவுசெய்து நடந்ததை மாற்றுங்கள்.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்